சரியான பாதையில் பயணிக்கும் பட்சத்தில் திமுக அரசுக்கு ஆதரவு தருவோம்.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2021, 12:23 PM IST
Highlights

காவிரி நதிக்கு குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுவருவதை எதிர்த்து தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.

மேகதாது அணை விவகாரத்தில் நிச்சயம் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என்றும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சரியான பாதையில் பயணிக்கும் பட்சத்தில் நிச்சயம் அதற்கு அதிமுகவின் ஆதரவு இருக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். 

காவிரி நதிக்கு குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுவருவதை எதிர்த்து தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு டெல்லி சென்று அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளது, காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது எனவும், அப்படி செய்யும் பட்சத்தில் தமிழகம் பாலைவனமாக மாறும் எனவும் வலியுறுத்த உள்ளனர். இந்நிலையில் அக்குழுவில் இடம் பெற்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார், அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது கூறிய அவர், அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்த உள்ளோம். அதிமுக எப்போதும் மக்கள் நலன் கருதியும் விவசாயிகளின் நலன் கருதியும் ஆக்கப்பூர்வமான முடிவுகளுக்கு ஆதரவு அளிக்கும், தமிழகத்தில் ஜீவாதார உரிமையான காவிரி நதிநீர் உரிமையை கட்டிக்காத்து அந்த உரிமையை பெற்றுத் தந்தது அதிமுக அரசு. இந்த விவகாரத்தில் நிச்சயம் தமிழகத்திற்கு முழு வெற்றி கிடைக்கும், இது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு அதிமுக எப்போதும் துணை இருக்கும், இதேபோன்று திமுக அரசு சரியான பாதையில் பயணிக்கும் பட்சத்தில் நிச்சயம் அதிமுகவின் ஆதரவு திமுக அரசுக்கு இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகக் கூறினார்.
 

click me!