தமிழகத்தில் மேலும் ஊடரங்கு நீட்டிப்பு..? முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை.. இன்று மாலை வெளியாகிறது முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2021, 11:27 AM IST
Highlights

அதன்படி மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது  அதன் பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. 

தமிழகம் முழுவதும் ஜூலை 19ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள்  வழங்குவது தொடர்பாகவும்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கடந்த மே 7-ந் தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 36 ஆயிரத்தை கடந்தது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஜூலை 19ம் தேதி வரை 8வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. 

ஜூலை 19ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 9வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும்,சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு மேல் ஆலோசனை மேற்கொள்கிறார். அதேப்போல், தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாகவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தளங்களுக்கான வாய்ப்புகள்: திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் உறவினர்கள் பங்கேற்பதில் உள்ள எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது, கடைகள் செயல்படும் நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி, செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது சனிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

click me!