திருமாவளவன் கண்ணசைத்து இருந்தால் மோகன் ஜி அன்று வெளியில் நடமாடியிருக்க முடியாது.!! விசிக சங்க தமிழன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 15, 2021, 1:43 PM IST
Highlights

விசிகவினர் அதை பெரிது படுத்தி இருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கும், ஆனால் திருமாவளவன் அதனை எளிதாக கடந்து போக சொல்லிவிட்டார். அதுதான் தலைமைப்பண்பு, அன்புமணி அப்பாவி வன்னிய இளைஞர்களை அரசியல் சுயலாபத்திற்காக தூண்டிவிடுகிறார். 

அன்று எங்கள் தலைவர் தொல். திருமாவளவன் மட்டும் கண் அசைத்திருந்தால் மோகன்ஜி வெளியில் நடமாடியிருக்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி  செயலாளர் சங்கத்தமிழன் கூறியுள்ளார். ஆனால்  அதை பெரிதுபடுத்த வேண்டாம் என எங்கள் தலைவர் எங்களுக்கு அறிவுரை கூறியதால் நாங்கள் அதை கடந்து சென்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் திரைப்பட விவகார்த்தில் நடிகர் சூர்யாவை பாமகவினர் மிரட்டி வரும் நிலையில் சங்கத் தமிழன் இவ்வாறு கூறியுள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம்  ஜெய் பீம், இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி பாமகவினர் மற்றும் காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அன்புமணி காட்டமாக அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இந்த இரண்டு அறிக்கைகளும் மோதலாக வெடித்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா 3 கோடி வன்னியர்களிடம்  மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வெளியில் நடமாட முடியாது என தொடர்ந்து பாமகவினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். 

குறிப்பாக மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை எந்த திரையரங்கிலும் வெளியிட விடமாட்டோம், என்றும் இது தமிழ்நாட்டில் அனைத்து இடங்களில் நடைபெறும் என்றும், இனி சூர்யா விமானத்தில்தான் தமிழ்நாட்டுக்குள் சுற்றவேண்டும், அவர் சாலை வழியாக ஒரு போக முடியாது என எச்சரித்துள்ளார். சாதி கலவரத்தை தூண்டும் வகையில் வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் பூதாகரமாகி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சங்க தமிழன், யூடியூப் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில்,  ஜெய்பீம் என்ற ஒரு பெயரில் சூர்யா இப்படி ஒரு படம் எடுப்பார் என்று நாங்கள் நம்பவே இல்லை, ஆனால் இந்த தருணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இளைஞர்கள் சார்பில் நாங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இந்த படம் சமூகத்தில் மிகப் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோர் இந்த சமூகம் எப்படி வரவேண்டும் என விரும்பினார்களோ அப்படிப்பட்ட கருத்தை சொல்கிற படமாக இது இருக்கிறது. 

ஆனால் அந்த படத்தில் வரும் உதவி ஆய்வாளர் ஒரு தலித் கிறிஸ்தவர் என மோகன்ஜி கூறிவருகிறார், அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், உண்மையில் அவர் வேறு ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதை மோகனுக்கு நான் கூறிக் கொள்கிறேன். இந்த பிரச்சனையை முதலில் கிளப்பியது மோகன் ஜி தான், ருத்ர தாண்டவம் படம் தொடர்பாக ஒரு யூடியூப் சேனலில் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய மோகன்ஜி அவமானப்பட்டார், அந்த அவமானத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் அவமானப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறி மோசமான பிரச்சாரத்தை துவங்கி வைத்திருக்கிறார்.  அதை நம்பிக் கொண்டு அன்புமணியும் ஒரு நீண்ட அறிக்கையை சூர்யாவுக்கு எதிராக வெளியிட்டார், அந்த அறிக்கையை படித்து சூரியன் பயந்து விடுவார் என்று அவர்கள் எண்ணினார்கள், ஆனால் அவர் அதற்கு தெளிவாக பதிலடி கொடுத்துள்ளார். மொத்தத்தில் இவர்கள் அந்த படத்தில் குருமூர்த்தியை அவமானப்படுத்தி விட்டதாக கூறுகிறார்கள், குருமூர்த்தி என்றால் காடு வெட்டி குருமூர்த்திதானா.? இன்னோரு தரப்பினர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவமானப்படுத்தி விட்டதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த பிரச்சினையை கிளப்பி விட்டதே மோகன்ஜி தான். மொத்தமாக பாமகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக பாஜகவால் களமிறக்கப்பட்டவர்தான் மோகன் ஜி.  பாமகவில் இருப்பவர்களை மெல்ல பாஜகவின் பக்கம் இழுப்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை, இது பாமகவுக்கு தெரியும், அதனால்தான் உயர்மட்டக்குழுவிலேயே, ராமதாஸ் இது குறித்து பேசியிருக்கிறார். இந்த சர்ச்சைக்குரிய மோகன் ஜி எடுத்த திரைப்படத்தில் எங்களது தலைவரின் உருவத்தை போல ஒரு கேரக்டரை காட்டுகிறார், நாங்கள் எல்லாம் கொந்தளித்துப் போய் இருந்தோம், நாங்கள் நினைத்திருந்தால் அந்த படத்தை ஓட விடாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் எங்கள் தலைவர் கண்டுகொள்ள வேண்டாம் என கூறிவிட்டார். ஆனால் படம் வெளியான பிறகும் விடுதலைச்சிறுத்தைகள் தலைவரை தான் நான் சித்தரித்தேன் என்று அவர் பேட்டி கொடுக்கிறார். 

இப்படிப்பட்டவர்கள் ஜெய்பீமை எதிர்கிறார்கள். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் விஜய் என்ற ஒரு தம்பி சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் திரௌபதி படத்தில் ஒரு கதாபாத்திரம் அச்சு அசலாக திருமாவளவன் போன்று இயக்குனர் மோகன் ஜி காட்சிப்படுத்தி இருப்பார், அது குறித்து திருமாவளவனிடம் கருத்து கேட்டபோது அந்த படத்தை நான் பார்க்கவில்லை, பார்க்க எனக்கு நேரமும் இல்லை அது பற்றி கருத்து சொல்ல ஒன்றுமில்லை என்று தெரிவித்திருந்தார். விசிகவினர் அதை பெரிது படுத்தி இருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கும், ஆனால் திருமாவளவன் அதனை எளிதாக கடந்து போக சொல்லிவிட்டார். அதுதான் தலைமைப்பண்பு, அன்புமணி அப்பாவி வன்னிய இளைஞர்களை அரசியல் சுயலாபத்திற்காக தூண்டிவிடுகிறார். பாவம் என்று அதில் அந்த இளைஞர் கூறியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இதை சுட்டிக் காட்டியுள்ள சங்கத்தமிழன் இன்றைக்கு நான் சொல்கிறேன் மோகன் சிக்கி சொல்கிறேன் அன்று எங்கள் தலைவர் திருமாவளவன் கண்ணசைத்து இருந்தாள் அவர் தமிழ்நாட்டில் நடமாடி இருக்க முடியுமா இது சவால் எல்லாம் இல்லை நாங்கள் இந்த பாமகவை போல சவால் எல்லாம் விட மாட்டோம் இதை உறுதியாக சொல்கிறோம் என அவர் எச்சரித்துள்ளார்..

 

click me!