Jai Bhim Issue | அமேசானுக்கே ஆப்படிக்கும் வன்னியர் சங்கம்!! ”பதில் சொல்லு” என வக்கீல் நோட்டீஸ்...

By Ganesh RamachandranFirst Published Nov 15, 2021, 1:16 PM IST
Highlights

Jai Bhim Issue | ஜெய் பீம் பட விவகாரத்தில் தங்களுக்கு எதிரான அநீதிக்கு தீர்வு கிடைக்காமல் ஓயப்போவதில்லை என்று பலமாக இறங்கி அடிக்கிறது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி.

ஜெய் பீம் திரைப்படம் இருளர் மற்றும் மலை வாழ் மக்களின் துன்பங்களை வெளிக்காட்டும் பல நல்ல விஷயங்களை செய்திருந்தாலும், திட்டமிட்டு வன்னியர் சமுதாயத்தின் பெயரைக் கெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளது. ஜெய் பீம் படத்திற்கு எதிரான வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துக்கள், அதற்கு சூர்யா மற்றும் அவரது மனைவியும் படத்தின் தயாரிப்பாளருமான ஜோதிகா ஆகியோரின் பதில்கள் என்று நீண்டுகொண்டே செல்கிறது சர்ச்சை. திரைப்பட சர்ச்சை என்பதைத் தாண்டி பாமக மற்றும் அதன் எதிர் துருவ அரசியல் மேற்கொள்ளும் கட்சிகளுக்குள்ளான அரசியல் யுத்தமாகவும் இது மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை என்று இறங்கியுள்ளது வன்னியர் சங்கம்.

வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் பு.த.அருள்மொழி சார்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மூத்த வழக்கறிஞருமான பாலு இன்று ஒரு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில் படத்தை தயாரித்த 2டி நிறுவனம் முதல் எதிர் மனுதாரராகவும், நடிகர் தயாரிப்பாளர் சூர்யா, அவரது மனைவியும் தயாரிப்பாளருமான ஜோதிகா, இயக்குநர் த.செ.ஞானவேல், படத்தை வெளியிட்ட அமேசான் ஒடிடி தளம் ஆகியோர் அடுத்தடுத்த எதிர் மனுதாரர்களாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எப்படி திட்டமிட்டு தவறாக சித்தரிக்கப்பட்டது என்று அந்த மனுவில் விரிவாக விளக்கியுள்ளார் வழக்கறிஞர் பாலு. குறிப்பாக வன்னியர்கள் புனிதமாகக் கருதும் அக்னி குண்டத்தை தவறு செய்பவர் வீட்டின் குறியீடாக படத்தில் காண்பித்திருப்பத்தை பல ஆதாரங்களோடு கூறும் பாலு, பல மாதங்கள் திட்டமிட்டு கதையெழுதி மேற்கொள்ளப்படும் ஒரு படப்பிடிப்பில், அக்னி குண்டம் புகைப்படத்துடனான ஒரு கேலண்டர் தற்செயலாகவோ, தவறுதலாகவோ வந்திருக்க முடியாது என்றும், இது திட்டமிட்டு வன்னியர்களை அவமதிக்க மேற்கொள்ளப்பட்ட நடவைக்கை என்றும் கூறியுள்ளார்.

அக்னி குண்டம் கேலண்டர் தவறுதலாக வந்துவிட்டது, அதை நீக்கிவிட்டோம் என்று இயக்குநர் ஞானவேல் கூறினாலும், அதை ஏற்கனவே பல லட்சம் பேர் அமேசான் தளத்தில் பார்த்து விட்டனர் என்றும், திட்டமிட்டு வன்னியர்களை தவறாக சித்தரித்துள்ளீர்கள் என்றும் அந்த நோட்டீஸ் குறிப்பிடுகிறது. அதேபோல வழக்கறிஞர் சந்துரு, பாதிக்கப்பட்ட பெண்ணான செங்கேணி, போலீஸதிகாரி பெருமாள்சாமி என்று அனைவரது பெயர்களையும் படத்தில் நிஜப் பெயர்களாகவே வைத்துவிட்டு, படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று கூறிவிட்டு குற்றம் செய்த கொடூர போலீஸ் அதிகாரியான கிருஸ்தவ மதத்தை சேர்ந்த அந்தோணிசாமி கதாப்பாத்திரத்தை மட்டும் மாற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தோணிசாமியை, குருமூர்த்தியாகவும், அவரை ஒரு இந்து வன்னியராகவும் காட்டியுள்ளது, வன்னியர் சமூகம் எப்போதும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை கொடுமைப்படுத்தும் சமூகம் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், குருமூர்த்தி என்று பாத்திரத்திற்கு பெயர் வைத்துவிட்டு, வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவரான மறைந்த குருவை குறிக்கும் வித்தத்தில், ‘குரு’ என்றே நீதிமன்ற காட்சிகளில் அழைத்துள்ளது உள்நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளது அந்த நோட்டீஸ்.

எனவே, நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 24 மணிநேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்டு, இனி வன்னியர்களுக்கு எதிரான செயல்களை கைவிட வேண்டும் என்றும், திட்டமிட்டு மேற்கொண்ட மானநஷ்ட செயல்களுக்கு நஷ்டஈடாக 5 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் அந்த நோட்டீஸ் கூறுகிறது. தவறினால், இ.பி.கோ 499, 500, 505 ஆகிய பிரிவுகள் அடிப்படையில் கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என்று சூர்யா,ஜோதிகா, ஞானவேல், 2டி நிறுவனம் மற்றும் அமேசான் தளத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

click me!