#AbhinavAmbulance பசுக்களுக்கும் ஆம்புலன்ஸ் ; யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி

By Kanmani PFirst Published Nov 15, 2021, 1:36 PM IST
Highlights

பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பசுக்களுக்கு அபினவ் ஆம்புலன்ஸ் என்ற 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையை உத்தரபிரதேச அரசு தொடங்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு பசுக்களுக்கான புதிய புதிய அதிரடி திங்களை அமலாக்கி வருகிறது. அதன்படி கடந்த 2019-ல்  உரிமையாளர்கள் இல்லாமல் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை வளர்க்க முன்வருபவர்களுக்கு கால்நடை ஒன்றுக்கு நாள்தோறும் ரூ.30 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த தொகை 3 மாதத்திற்கு ஒருமுறை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்திருந்தது. 

பின்னர் கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்கொலையில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும்  ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என  உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கென கடந்த ஆண்டு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பசு வதை தடுப்பு  திருத்த சட்டத்திற்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு பசுக்களை பாதுகாப்பதில் உ.பி அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே , உ.பி.யில் உள்ள பாலியா மாவட்டம் பெய்ரியா தொகுதி எம்எல்ஏவான சுரேந்திர சிங் ,  பசுவின் கோமியத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் கரோனாவிலிருந்து தப்பிக்க முடியும் எனக் கூறி வீடியோவை வெளியிட்ட விநோதமும் நடந்தேறியிருந்தது.

இந்நிலையில் பசுக்களுக்கென சிறப்பு அம்புலன்ஸ் 24 மணி நேரமும் இயக்கப்படும் என  உத்திரபிரதேச பால்வள மேம்பாடு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயண் சவுத்ரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார் . 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பசுக்களுக்கு அபினவ் ஆம்புலன்ஸ் என்ற 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையை உத்தரபிரதேச அரசு தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த தனித்துவமான முயற்சிக்கு 515 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன, இது நாட்டிலேயே முதல் முறையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 


 

click me!