தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் அஞ்சலி செலுத்த கூடாது என்றால் வேறு எங்கு செலுத்துவது.. திருமுருகன் காந்தி ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2022, 2:32 PM IST
Highlights

தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவு அஞ்சலி செலுத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் இல்லை  என்றாலும் தடையை மீறி நினைவு அஞ்சலி செலுத்துவோம் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். 

தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவு அஞ்சலி செலுத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் இல்லை  என்றாலும் தடையை மீறி நினைவு அஞ்சலி செலுத்துவோம் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் நினைவஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்றால் வேறு எங்கு செலுத்துவது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் அதை நினைவுகூறும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மே 17 இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது இதில் பல்வேறு தமிழ் தேசிய அரசியல் இயக்கங்கள் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. ஆனால் தடையை மீறி நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில்  தமிழின இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டையொட்டி விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோருக்கு செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது திருமுருகன் காந்தி பேசியதாவது:- தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெரினா கடற்கரையில் நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தீவிரமாக இருந்த காரணத்தினால் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் பெருமளவில் தமிழ் சொந்தங்கள் ஒன்றுகூடி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு தமிழக அரசு முறையாக அனுமதி வழங்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் எந்த நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்றால் வேறு எங்கு தான் கூட்டத்தை நடத்துவது. உலக நாடுகளில் அனைத்திலும் இலங்கையில் நடந்த இனப் படுகொலையை நினைவு கூறும் வகையில் அந்தந்த நாடுகளில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவேந்தல் கூட்டம் நடத்துகிறது. நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பது என்பது சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது. எனவே வரும் 24ஆம் தேதி நினைவேந்தல் கூட்டத்தை மெரினா கடற்கரையில் ஒருங்கிணைத்திருக்கிறோம். அரசு அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவோம். ஏன் அரசு இந்த நினைவேந்தல் கூட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழ் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என 2013ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம், எனவே தமிழ்நாட்டிலேயே தமிழர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல. எனவே அஞ்சலிக்கு அனுமதி வழங்க வேண்டும் நிச்சயம் அரசு வழங்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!