
திமுக முறையாக வாக்கு சேகரித்திருந்தால், ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் வாங்கியிருக்காது தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளரை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். பிரதான எதிர்க்கட்சியான திமுக, மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டதுடன் அக்கட்சியின் வேட்பாளர் டெபாசிட்டையும் இழந்தார். திமுக வேட்பாளர் டெபாசிட் கூட வாங்காதது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திமுகவும் தினகரன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக ஆட்சியாளர்கள், பிரசாரத்தின்போதே குற்றம்சாட்டினர். திமுகவும் தினகரனும் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முனைவதாகவும் ஆட்சியாளர்கள் குற்றம்சாட்டினர்.
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதும், ஆட்சியை கவிழ்க்க நினைத்த திமுக டெபாசிட் இழந்ததாகவும் தினகரனின் வெற்றி பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி எனவும் ஆட்சியாளர்கள் விமர்சித்தனர். அதிமுகவிலிருந்து தனித்து நிற்கும் அக்கட்சியின் அங்கமான தினகரன் வெற்றி பெற்றால், அதிமுகவில் மேலும் குழப்பம் நீடிக்கும் என்பதால், போட்டியிலிருந்து விலகியே நின்று வேடிக்கை பார்க்க முடிவு செய்தே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை திமுக அணுகியதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
முதல்வர், அமைச்சர்கள், தினகரன் ஆகியோர் 10 நாட்களுக்கும் மேலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது கூட கடைசி மூன்று நாட்கள் மட்டுமே ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தலிலிருந்து திமுக விலகி நின்றதையே ஸ்டாலினின் இச்செயல் காட்டியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆக மொத்தத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலிருந்து திமுக விலகி நின்று வேடிக்கை பார்த்தது என்ற கருத்தை அரசியல் நோக்கர்கள் வலுவாக முன்வைத்தனர். அதனால் தான் டெபாசிட்டை இழக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டதாகவும் கருத்துகள் கூறப்பட்டன.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் திமுக சரியாக செயல்படவில்லை என்பதை தினகரனும் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஆர்.கே.நகரில் திமுக முறையாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தால், அதிமுக டெபாசிட் கூட வாங்கியிருக்காது என தெரிவித்தார். அதாவது திமுக இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும். அதிமுக மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்திருக்கும் என்பதை தினகரன் தெரிவித்துள்ளார்.