
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சடலத்தைக் கண்டு தான் மிகவும் வேதனைப்பட்டதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உருக்கத்துடன் கூறியுள்ளார். மேலும், பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் தானும் தன் சகோதரி பிரியங்காவும் துயரமடைந்ததாகவும் கூறியுள்ளார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். சில இடங்களில் தான் கோயிலுக்குச் சென்று, வணங்கி வழிபட்டு அரசியல் ரீதியாக அம்மாநில மக்களின் ஆதரவைப் பெற முயற்சி செய்து வருகிறார். அது குஜராத்தில் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளான போதும், அவர் பெரிதாக அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
குஜராத் சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார் ராகுல். இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் முக்கியமான வர்த்தக நகரான வடோதராவில் (பரோடா) நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அப்போது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. காரணம், அவர் செல்லுமிடங்களில் எல்லாம், தனது குடும்பம் தீவிரவாதத்துக்கு பலியாகியிருக்கிறது என்று கூறுவார். அவர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, பிரபாகரனின் உடலைப் பார்த்ததும் நானும் என் சகோதரி பிரியங்காவும் பெரிதும் வேதனையடைந்தோம். பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் நான் துயரம் அடைந்தேன். மற்றவர்களின் துயரங்களில் பங்கு கொள்வதுதான் 'காந்தி’ குடும்ப பாரம்பரியம் என்றார்.
பாஜக.,வை இல்லாமல் ஆக்கி முடிப்பது என்பது என் திட்டமில்லை, 2014ல் நாம் தோல்வியில் கற்றுக் கொண்டதை சரி செய்வோம் என்றும் அவர் கூறினார்.