
தேனியில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை குருவியம்மாள் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொகுதியான போடியில் டெங்கு காய்ச்சல் காரணமாக ராஜேஸ்வரி (26) என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போடி அரசு
மருத்துவமனையில் போதிய வசதிகள் இலலை என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாது பரிசோதனைக்கு வருபவர்களை மருத்துவமனை ஊழியர்கள்
வாய்க்கு வந்தபடி பேசுவதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
போடியில் மட்டும் இதுவரை 9 வயது குழந்தை, 12 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ராஜேஸ்வரி என்ற கர்ப்பிணி பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
போடியில் சுகாதார பிரச்சனைகளில் ஓ.பன்னீர்செல்வம் கவனம் செலுத்தியிருந்தார் கர்ப்பிணி பெண்ணான ராஜேஸ்வரி இறந்திருக்க மாட்டார் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், தேனி மாவட்டம் குருவியம்மாள் புரத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்றுள்ளார். தேனி அல்லிநகரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஆய்வுப்பணிக்காக சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குருவியம்மாள் கிராமத்துக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அப்போது வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.