உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் ஸ்லீப்பர் செல்களை 'களை' எடுக்க பக்கா பிளான் போடும் எடப்பாடியார்!?

First Published Oct 10, 2017, 12:37 PM IST
Highlights
before local body elections dinakaran supporters would be removed from party positions


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் போன வருடம் அக்டோபரிலேயே நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு வருடம் வழக்கு போட்டே கடந்துவிட்டது.  வழக்கு ஒவ்வொரு கட்டத்தையும் வாய்தாக்களையும் கடந்து, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வரும் 23ஆம் தேதி விசாரிக்கப்படும் என மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ஆம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்தக் கெடுவுக்குள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடவில்லை. மாறாக, தீர்ப்பை எதிர்த்து  உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனவே, தேர்தல் அறிவிப்பு மேலும் தாமதமாகியே வருகிறது.  

முன்னதாக, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் அறிவிப்பை வெளியிடாத தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் புகார் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் வருகிற 23-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உள்ளாட்சித்  தேர்தல் நடத்தாததே தமிழகத்தில் டெங்கு அதிகரிக்கக் காரணம் என்று திமுக., செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் இப்போது மாநில அரசுக்கும் எழுந்துள்ளது. 

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவதற்கு தங்களுக்கு இரட்டை இலைச் சின்னம் வந்தாக வேண்டும் என்னும் நெருக்கடியில் உள்ளனர் எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும். மேலும் அடுத்த நெருக்கடியாக, கட்சிக்குள் இருக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள். எந்த நேரத்திலும் கவிழ்த்துவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதால், அது குறித்து பெரிதும் கவலைப்படுகின்றனர். எனவே, தமிழகத்தில் விரைவில்  உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க  வேண்டுமானால், கட்சிக்குள் களை எடுப்பு அவசியம் என்று கருதுகின்றனர் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர். 

இந்த விவகாரத்தில் தீவிரம் காட்ட முனைந்து தற்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளனராம். இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் பேசியபோது, 

அதிமுகவில் தினகரன் ஆதரவு மாவட்டச் செயலாளர்களை நீக்கி, வடசென்னை உள்பட மாவட்ட வாரியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து விரைவில் வெளிவரும் எனவும் கூறுகின்றனர். 

click me!