அதெப்படி ரெண்டு இடங்களில் நீங்க தேசியக் கொடியை ஏற்றலாம்..? தமிழிசையை வான்டடாக வம்பிழுக்கும் நாராயணசாமி.!

By Asianet TamilFirst Published Jan 25, 2022, 8:02 AM IST
Highlights

இரு மாநிலங்களிலும் தேசியக் கொடி ஏற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட   அரசுக்கு  அவப்பெயரை தரும். இதனை சுட்டிக் காட்ட காரணம், மத்திய அரசு புதுச்சேரிக்கு ஆளுநரை நியமிக்காததுதான். 

தெலங்கானா, புதுச்சேரி என இரு மாநிலங்களிலும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றுவதை ஏற்க முடியாது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். ஆனால், அவர் புதுச்சேரி மாநில முழு நேர ஆளுநர் போல செயல்பட்டு வருகிறார். குடியரசு தினத்தன்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த அந்தமான் நிகோபார் தீவு ஆளுநர், மத்திய உள்துறையின் அனுமதி பெற்று குடியரசு தினத்தன்று புதுச்சேரி முதல்வர் தேசியக்கொடி ஏற்ற அனுமதி பெற்றார்.
 
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரந்த மனதுடன் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதனை ஆளுநர் செய்ய தவறிவிட்டார். இந்திய சரித்திரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர், 2 இடங்களில் தேசிய கொடியேற்றியதாக சம்பவம் நடைபெறவில்லை. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு உரிமை உள்ளது. அதே சமயத்தில் இரு மாநிலங்களிலும் தேசியக் கொடி ஏற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட   அரசுக்கு  அவப்பெயரை தரும். இதனை சுட்டிக் காட்ட காரணம், மத்திய அரசு புதுச்சேரிக்கு ஆளுநரை நியமிக்காததுதான். ஆளுநரை நியமித்து இருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். 

புதுச்சேரியில் ஆளும் அரசு டம்மியாக செயல்படுகிறது. அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு முதல்வர் வேடிக்கை பார்த்து வருகிறார். இதனால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களுக்கு தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி ஆட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக சீரழிந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் ரங்கசாமி அதிகாரத்தை தன் கையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் புதுச்சேரியை ஆள லாயக்கற்ற முதல்வர் என மக்கள் தீர்மானித்து விடுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து முதல்வர் எழுந்து புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

click me!