சபாநாயகர் அப்பாவுவை தகுதி நீக்கம் செய்யனும்.! திடீர் கோரிக்கை விடுத்த இந்து முன்னனி- என்ன காரணம் தெரியுமா.?

By Ajmal KhanFirst Published May 30, 2023, 1:21 PM IST
Highlights

இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர்  அப்பாவுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து முன்னனி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் சபாநாயகர்

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தொடர்பாக இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் சபாநாயகர் அப்பாவு பேசியதாக  இந்து முன்னனி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சபாநாயகர் திரு. அப்பாவு தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு ஜனாதிபதி மேதகு. முர்மு வந்தால் கங்கை நீரால் புனிதப்படுத்த வேண்டும் என்பதாலேயே அழைக்கப்படவில்லை என்று அவர் பேசியுள்ளதை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது. இவ்வாறு சபாநாயகர் பேசியது அவர் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்தை அவமதிக்கும் செயல்.  நாகரிகம் இல்லாமல், மத காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் சபாநாயகர் பேசியதை தமிழக முதல்வர் ஏற்கிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

 கல்லறைகளில் கூட சாதிபேதம்

சனாதன தர்மத்தை பற்றி கிறித்துவரான அப்பாவு விமர்சனம் செய்துள்ளது அறியாமை மட்டும் அல்ல தீய உள்நோக்கம் கொண்டது. அனைத்து கோவில்களிலும் அனைத்து சமூகத்தை சேர்ந்த 63 நாயன்மார்கள் சன்னதி இருப்பதும், ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாயன்மார்களுக்கும் குரு பூஜை நடப்பதும் அனைவரும் அறிந்ததே. அதே சமயம் அப்பாவு சார்ந்துள்ள கிறித்துவ மதத்தில் சாதி வன்மமும், நிறவெறியும் இன்றும் தலைவிரித்தாடுகிறது. இதை பற்றி பொதுவெளியில் தைரியம் இருந்தால் பேசட்டும்.  கல்லறைகளில் கூட சாதிபேதம் பார்ப்பதும், இறந்தவர் குடும்பம் சர்ச்க்கு தசமபாகம் நிதி தரவில்லை என புதைக்க மறுத்த மனிதாபிமானமற்ற முறையில் பாதிரியார்கள் பேசியது இவருக்கு தெரியுமா? கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியக்கூடாது என்பார்கள் இது அப்பாவுவிற்கு சாலப் பொருந்தும். 

அப்பாவுவை தகுதி நீக்கம் செய்யனும்

கிறித்தவத்தை தூக்கிப் பிடித்து தனது கிறித்துவ விசுவாசம் எனும் அடிமை புத்தியை காட்டி அவர் மகிழட்டும். ஆனால் கிறித்துவர்கள் வரவில்லை என்றால் தமிழர்கள் தற்குறியாக இருந்திருப்பார்கள் என்பதும், இந்த பாரத தேசத்தின் உயரிய பதவியில் உள்ள குடியரசுத் தலைவரை சாதியை முன்னெடுத்து, சனாதன இந்து தர்மத்தையும், நமது குடியரசு தலைவரையும் அவமானப்படுத்தி பேசியுள்ளதும் அரசியல் சாசன சட்டப்படி குற்றம்.  சபாநாயகர் அப்பாவு அவர்களின் அநாகரிகமான பேச்சை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.அவரை பதவி நீக்கம் செய்ய தமிழக முதல்வரையும் தமிழக கவர்னர் அவர்களையும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்வதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சிஎஸ்கே வெற்றிக்கான வின்னிங் ரன் அடித்தவர் எங்க பாஜக கட்சி காரியகர்த்தா ஜடேஜா தான்..! அண்ணாமலை அதிரடி
 

click me!