
அதிகாரிகளை அரசின் அனுமதியின்றி விசாரணை செய்யக்கூடாது, பத்திரிகைகள் செய்தி வெளியிடக்கூடாது என்று ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த ‘கிரிமினல் சட்டத்தை’ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று முதல்வர் வசுந்தரா ராஜே அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப மாநில உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அவசரச்சட்டம்
ராஜஸ்தான் அரசு கடந்த செப்டம்பர் 7-ந்தேதி ஒரு அவசரச்சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, புதிதாக பிறப்பிக்கப்பட்ட (வாய்பூட்டு) கிரிமினல் சட்டத்திருத்தத்தின் படி முன்னாள் நீதிபதிகள், கலெக்டர்கள், மாஜிஸ்திரேட்கள், அரசு ஊழியர்கள் மீது கூறப்படும் புகார்கள் மீது விசாரணை செய்யும் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பதாகும்.
2 ஆண்டுகள் சிறை
மேலும்,தனி மனிதர்கள் அரசு அதிகாரிகள் மீது கூறும் புகார்களையும், ஊடகங்கள் அரசின் அனுமதியில்லாமல் வெளியிடக்கூடாது. அவ்வாறு மீறி வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
எதிர்ப்பு
இந்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. சட்டசபையில் இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது, வெளிநடப்பு செய்து எதிர்ப்பைத் தெரிவித்தன. இருந்தபோதிலும், ராஜஸ்தான் அரசு சட்டசபையில் சட்ட மசோதாவைத ாக்கல் செய்து, பின் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி இருக்கிறது.
வழக்கு
இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்பூனம் சந்த் பண்டாரி, வழக்கறிஞர் பவத் கவுர், பி.யு.சி.எல். அமைப்பு, சமூக ஆர்வலர் ஸ்ரீஜனாஸ்ரீசத் உள்ளிட்ட 7 பேர் ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த வாய்பூட்டு சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
விசாரணை
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, தீபக் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், “ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ள வாய்ப்பூட்டு சட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. சட்டவிரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டனர்.
4 வாரங்களுக்குள் பதில்
இது குறித்து மனுதாரர்் கவுர் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் அஜெய் ஜெயின் கூறுகையில், “ நாங்கள் தாக்கல் செய்த மனு மிகக்குறுகிய நேரமே விசாரிக்கப்பட்டது. ராஜஸ்தான் அரசின் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் ஒன்றாக நீதிபதிகள் விசாரிக்க இருக்கிறார்கள். இந்த சட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீண்டும் இந்த வழக்கு நவம்பர் 27-ந்தேதிக்கு விசாரணைக்கு வருகிறது’’ என்றார்.