
அரசியலில் ஜெயிப்பதற்கு அறிவும், திறமையும் மட்டுமிருந்தால் பத்தாது! அதுக்கும் மேலே கண்ணுக்கு புலப்படாத அதிர்ஷ்டம் உள்ளிட்ட சில விஷயங்களுக் கைகொடுக்க வேண்டும். அப்படி திறமையிருந்தும் ஜொலிக்க முடியாமல் கிடக்கும் அரசியல்வாதிகளில் ஒருவர் வைகை செல்வன்.
நல்ல கல்வி பின்புலம், விஷயமடங்கிய பேச்சாற்றல் ஆகியன இருந்தும் கூட பெரியளவில் ஜொலிக்காமலிருந்த வைகைக்கு கடந்த ஆட்சியில் இடையிலடித்தது கல்வி மந்திரி யோகம்! நின்று ஆடுவார் என்று நினைத்தால், பாதி வழியிலேயே பாவமாய் இறக்கிவிட்டார் ஜெயலலிதா.
தற்போது எடப்பாடி - பன்னீர் இணைந்த அ.தி.மு.க. அணியின் செய்தி தொடர்பாளராக இருக்கிறார் வைகை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’பாக்கெட் பால்’ குறித்து ஒரு பூதத்தை கிளப்பி தமிழகமே அந்தரான போது, அவரோடு தரையிறங்கி மல்லுக்கு நின்று சண்டையிட்டவர்.
இவரிடம் ‘புதிய வாக்காளர்கள் அடங்கிய வாக்கு வங்கி மிக முக்கியமானது. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இவர்களின் பங்கு அலாதியானது. ஆனால் இந்த புதிய வாக்காளர்கள் யாரும் சின்னத்தை பார்ப்பதில்லை. ஆகவே சின்னத்தை கட்டிக் கொண்டு அழுவதால் எந்த பயனுமில்லை’ என்று இரட்டை இலை சின்னத்துக்காக இரண்டு தரப்பும் அடித்துக் கொள்வது குறித்து நாம்தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கிண்டலடித்தது பற்றி கேட்டதற்கு...
“அரசியலில் சின்னத்தின் மதிப்பை எந்த காலத்திலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தேர்தல் அரசியலுக்கு வரும் ஒரு கட்சிக்கு சின்னம் உயிர் போன்றது. கொடி, சின்னம், கோட்பாடு, லட்சியம், சித்தாந்தம் இதெல்லாம் அக்கட்சியின் அடையாளங்கள். கிராமங்களில் இன்னமும் எங்களின் கட்சியை ‘ரெட்ட இலை கட்சி’ அப்படின்னுதான் அழைக்கிறாங்க. ரெட்டை இலை மீது தமிழக மக்களுக்கு இன்னமும் இருக்கும் அபிமானமென்பது அ.தி.மு.க. மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே.
ஆக சீமானின் கருத்தை நான் அடியோடு நிராகரிக்கிறேன்.” என்று பூசிமெழுகியவரிடம்...பி.ஜே.பி.யிடம் ஆளும் அ.தி.மு.க. அணி மடங்கி கிடப்பதாக எழுந்திருக்கும் விமர்சனம் பற்றி கேட்டபோது...
“மத்திய அரசுடன் சண்டையிட்டபடி இருந்தால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காது என்பதால்தான் இணக்காமாக இருக்கிறோம். பி.ஜே.பி.யுடன் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை, மத்திய அரசுடன் தான் இணைக்கமாக இருக்கிறோம்.” என்று அவர் சொல்ல,
மாப்பிள்ள அவருதான் ஆனா அவரு போட்டிருக்கிற சட்டைய பத்தி நான் பேசமாட்டேன்! என்பது போல் சுத்தி வளைச்சு சுயிங்கம் சாப்பிட்டிருக்கிறார்.