
முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையே போர் நடந்துவருவதாக அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, இந்த அரசை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என முதல்வர் பழனிசாமி பேசிவருகிறார். முதல்வராக இருந்துகொண்டு இப்படி பேசுவது நாகரீகமற்றது. அதற்கு கூடியவிரைவில் விடை கிடைக்கும். முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையே போர் நடந்துவருகிறது. அதுகுறித்துத்தான் பிரதமரிடம் சென்று பன்னீர்செல்வம் புலம்பியுள்ளார்.
டெங்கு தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் நிலையில், டெங்குவைத் தடுப்பதாக கூறி அமைச்சர் விஜயபாஸ்கர், ஊர் ஊராக சுற்றுலா செல்கிறார். டெங்குவைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக விஜயபாஸ்கர் கூறுகிறாரே தவிர, நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.
திருமாவளவன் குறித்து அவதூறாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன், மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமர் மோடியை விமர்சித்தால் வழக்கு போடுவது தமிழகத்தில்தான் வழக்கமாக உள்ளது. வடமாநிலங்களில் எல்லாம் வழக்கா போடப்படுகிறது?
இவ்வாறு, தமிழக அரசையும் தமிழக பாஜக தலைவர்களையும் புகழேந்தி விமர்சித்துப் பேசினார்.