இரவெல்லாம் வச்சு செய்த கனமழை.. சென்னையில் தரையிரங்க முடியாமல் தவித்த சர்வதேச விமானங்கள்..

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2021, 10:14 AM IST
Highlights

இதேபோல் 3.10 மணி அளவில் துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 3.25 மணிக்கு கொழும்பிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்து நின்றது.

நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்ததால், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முடியாமல் துபாய்- தோகா விமானங்கள்  பெங்களூருக்கு  திருப்பிவிடப்பட்டன. அதேபோல் 9 சர்வதேச விமானங்கள் புறப்புடுகையில் தாமதம் ஏற்பட்டது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இன்று காலை முதல் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

அதேபோல் சென்னை விமான நிலையத்தின் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதல் மழை பெய்து கொண்டே இருந்ததால் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திணறின, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து இன்று அதிகாலை 2.20 மணிக்கு 142 பயணிகளுடன் வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் மழை இடி, மின்னலுடன் மழை பெய்த  காரணத்தால் சென்னையில் அந்த விமானம் தரை இறங்க  முடியாமல் தவித்தது. பின்னர் அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் துபாயிலிருந்து 133 பயணிகளுடன் அதிகாலை 2. 40 மணிக்கு சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானமும் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.

இதேபோல் 3.10 மணி அளவில் துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 3.25 மணிக்கு கொழும்பிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்து நின்றது. பின்னர் வானிலை சீரானதும் விமானங்கள் தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான சிங்கப்பூர், துபாய், சார்ஜா, குவைத், ஹாங்காங், கொழும்பு உள்ளிட்ட 9 பன்னாட்டு விமானங்கள் சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன. 4:00 மணிக்கு மழை ஓய்ந்த பின்னரே பெங்களூர் சென்ற விமானங்கள் சென்னை திரும்பின, இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
 

click me!