One Nation One Health ID: இந்திய சுகாதாரத்துறையில் மாபெரும் புரட்சி.. பிரதமர் மோடி அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2021, 12:46 PM IST
Highlights

பெரும்பாலான மக்கள் தங்கள் உடல்நல பரிசோதனை விவரங்கள் மற்றும் ஆவணங்களை சிகிச்சைக்கு செல்லும் போதெல்லாம் உடன் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எப்போதெல்லாம் மருத்துவமனைக்கு போகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களால் அனைத்து அறிக்கைகளையும், பரிசோதனை ஆவணங்களையும் எடுத்துச் செல்ல முடிவதில்லை, 

மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாடு முழுவதும் துவக்கி வைத்தார். மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையின்போது அறிவித்திருந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது 6 யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் வகையில் அதற்கான திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய மருத்துவத் துறையில் புதிய மைல்கல் என்றும், அதாவது நவீன மின்னனு தொழில்நுட்பங்கள் வாயிலாக மருத்துவ  சேவைகளை மக்கள் எளிதாக பெற வழிவகுப்பதே இந்த மின்னணு மருத்துவத் திட்டம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது சுகாதாரத் துறையில் புதிய புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஒரு தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் ஒவ்வொரு இந்தியரிடத்திலும் ஆதார் கார்டு இருப்பதுபோல ஒவ்வொருவர் இடத்திலும்  டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டு இருக்கும், இதன் மூலம் உங்கள் மருத்துவ வரலாற்றை ஒரே கிளிக்கில் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும் என்பது இதற் சிறப்பாகும். டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டில்,  சம்பந்தப்பட்ட நபரின் மருத்துவ வரலாற்றின் தரவுகள் இருக்கும். அதன் பிறகு நோயாளிகள் ஆலொசனைக்கு செல்லும் போது மருத்துவ வரலாறு ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை என்பது இதன் தனிசிறப்பு. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, 

இந்தியாவின் சுகாதார வசதிகளில் புரட்சிகர மாற்றம்: 

கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் முயற்சியில் இன்று முதல் புது அத்தியாயம் தொடங்கியுள்ளது, சுகாதார புரட்சியை உருவாக்கும் மகத்தான பணி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் தொடங்கி வைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன், இது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கலைவதற்கு பெரும் பங்கு வகிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார். 

சஞ்சீவனி:- 

கொரோனா காலத்தில் டெலிமெடிசின்  இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது, 125 கோடி தொலைதூர  மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் நாட்டின் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுடன் வீட்டில் உட்கார்ந்தபடியே ஆலோசனை பெற முடிகிறது என்றார். 

உலகில் மிகப்பெரிய டிஜிட்டல் கட்டமைப்பு:- 

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத டிஜிட்டல் கட்டமைப்பு இந்தியாவில் உருவாகியுள்ளது என பிரதமர் பெருமிதம் தெரிவித்தார், 130 கோடி ஆதார் எண்கள், 118 கோடி மொபைல் சந்தாதாரர்கள், சுமார் 800 மில்லியன் இணைய பயனர்கள், 43 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளை இந்தியா பெற்றுள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய ஒருங்கிணைந்த கட்டமைப்பு இல்லை, இந்த ஒருங்கிணைவு சாதாரண மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்குகிறது என்றார்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஆரோக்கிய அடையாள அட்டையின் நன்மைகள்:-

பெரும்பாலான மக்கள் தங்கள் உடல்நல பரிசோதனை விவரங்கள் மற்றும் ஆவணங்களை சிகிச்சைக்கு செல்லும் போதெல்லாம் உடன் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எப்போதெல்லாம் மருத்துவமனைக்கு போகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களால் அனைத்து அறிக்கைகளையும், பரிசோதனை ஆவணங்களையும் எடுத்துச் செல்ல முடிவதில்லை, சில நேரங்களில் முக்கிய மருத்துவ குறிப்புகளும் காணாமல் போகும் சூழல் உள்ளது, ஆனால் தற்போதைய டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் முழுமையான சுகாதார விவரங்கள் அதில் சேகரிக்கப்படும், அதாவது அவருக்கு என்ன நோய் இருந்தது, இதற்கு முன் அதற்கு எந்த இடத்தில் சிகிச்சை பெறப்பட்டது, அவருக்கு எந்த மருத்துவர் சிகிச்சை வழங்கினார். அவர் இதுவரை உட்கொண்ட மருந்துகள் என்னென்ன என்பது போன்ற அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் நோயாளிகளின் நிலைமையை பரிசோதிக்கும் மருத்துவர்கள் எளிதில் அவர்களது ஹிஸ்டரியை  அறிந்து கொள்ள முடியும். நோயாளி சிகிச்சைக்கு செல்லும் போது தங்களது ஹிஸ்டரியை மருத்துவர்களிடம் ஆரம்பத்தில் இருந்து தெரிவிக்க வேண்டிய அவசியல் இல்லை என்பது இந்த டிஜிட்டல் ஆரோக்கிய அடையாள அட்டையின் நன்மையாகும்

முதலில் 6 யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது, அந்தமான் மற்றும் நிக்கோபார், சண்டிகர், லட்சத்தீவு, புதுச்சேரி, தாத்ரா, நகர் ஹவேலி, டாமன் டையூ ஆனால் இப்போது இந்த திட்டம் நாடு முழுவதும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், சுகாதார அடையாள அட்டையில் தரவும் முற்றிலும் பாதுகாப்பானது, அதாவது எந்த ஒரு மருத்துவரும் உங்கள் தரவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் (ஒருமுறை ஆனுகல்) இரண்டாவது முறை பார்க்க வேண்டும் என்றால் உங்களிடம் இருந்து அவர் அனுமதி பெறவேண்டும் என்ற வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!