அவரு, பிரதமர்களை உருவாக்கிய கிங்மேக்கர்.. கதறி அழுத சந்திரபாபு நாயுடுவுக்காக வெடித்த மாஜி அதிமுக எம்.பி.!

By Asianet TamilFirst Published Nov 20, 2021, 9:29 PM IST
Highlights

ஒன்றுபட்ட ஆந்திர முதலமைச்சராக திறம்பட பணியாற்றியவர். 1996 -97-இல் இரண்டு முறை மத்திய அமைச்சரவை உருவாக்கி, தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக முக்கிய காரணமாக இருந்தவர். தேசிய அரசியலில் தனி முத்திரை பதித்தவர். அவர் நேற்று தொலைக்காட்சிப் பேட்டியின் போது கண்ணீர் சிந்தியது என்னை மிகவும் பாதித்தது.

ஆந்திர முன்னாள் முதல்வர் கதறி அழுத விவகாரமும், அவருடைய குடும்பப் பெண்களை தரக்குறைவாக சட்டமன்றத்திலேயே விமர்சித்ததும் கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கதறி அழுதுகொண்டு அளித்த பேட்டி அரசியல்வாதிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன், இதைப்பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், “ஆந்திர முன்னாள் முதலமைச்சர் மறைந்த என்.டி. ராமாராவ் குடும்பத்தினருடன் எனக்கு 1984 முதல் நன்கு பரிச்சயம். என். டி.ஆரின் மனைவி  பசவராமதாரகம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலம் முதல் அவரது நான்கு மகள்களையும் - லோகேஸ்வரி, புரந்தரேஸ்வரி, புவனேஸ்வரி, உமாமகேஸ்வரி ஆகியோரை எனக்கு நன்கு தெரியும்.

அரசியலுக்கு நான் வந்த பிறகு சந்திரபாபு நாயுடுவுடன் நெருங்கிய பழக்கம். அம்மாவின் பிரதிநிதியாக அவரை பல முறை சந்தித்து பேசி இருக்கிறேன். ஆந்திர சட்டமன்றத்தில் சந்திரபாபு நாயுடு குடும்பம் பற்றியும் குறிப்பாக அவரது மனைவி புவனேஸ்வரி பற்றியும் நேற்று தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறாக பேசப்பட்டதாக சந்திரபாபு நாயுடுவின் பேட்டியை தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் படித்து அதிர்ச்சி  அடைந்தேன். 

ஒன்றுபட்ட ஆந்திர முதலமைச்சராக திறம்பட பணியாற்றியவர். 1996 -97-இல் இரண்டு முறை மத்திய அமைச்சரவை உருவாக்கி, தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக முக்கிய காரணமாக இருந்தவர். தேசிய அரசியலில் தனி முத்திரை பதித்தவர். அவர் நேற்று தொலைக்காட்சிப் பேட்டியின் போது கண்ணீர் சிந்தியது என்னை மிகவும் பாதித்தது. அரசியலில் கருத்து மாறுபாடுகள் இருப்பது இயற்கை. ஆனால், குடும்பப் பெண்களை தரக்குறைவாக சட்டமன்றத்திலேயே விமர்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. இன்று காலை சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடைபெற்ற சம்பவம் குறித்து என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தேன்.” என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
 

click me!