இன்னும் பல சீசன்களில் விளையாட வேண்டும்... தோனியிடம் கோரிக்கை விடுத்தார் மு.க.ஸ்டாலின்!! | CMStalin

By Narendran SFirst Published Nov 20, 2021, 7:27 PM IST
Highlights

#CMStalin | கலைஞர் கருணாநிதிக்கு பிடித்த விளையாட்டு வீரர் தோனி என்றும் தான் சிஎஸ்கே பாராட்டு விழாவுக்கு தோனியின் ரசிகராக வந்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை கடந்த மாதம் வென்றது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதனால் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு சென்னை அணிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை கலைவானர் அரங்கில் சென்னை அணிக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, வீரர்கள் மற்றும் அதன் உரிமையாளர் என்.ஶ்ரீனிவாசன் மற்றும் அவருடைய மகள் ரூபா குருநாத் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த பாராட்டு விழா தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் ஜெர்சியை பரிசாக வழங்கினர். சிஎஸ்கே அணியின் பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணியினருக்கு வெற்றிபெற்ற கோப்பையை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், சிஎஸ்கே பாராட்டு விழாவில் பங்கேற்றாலும், எனது நினைவு அனைத்து, மழை, வெள்ளம் பாதிப்பு, மக்களை பற்றியதாகவே உள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் யாராலும் மறக்க முடியாது, அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.  முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு பிடித்த விளையாட்டு வீரர்களில் தோனியும் ஒருவர். கபில் தேவுக்கு பிறகு இந்திய அணிக்கு கோப்பை பெற்றுத் தந்தவர் மகேந்திர சிங் தோனி. இந்த பாராட்டு விழாவுக்கு நான் தோனியின் ரசிகராக வந்துள்ளேன். தமிழக மக்கள் தோனியை தங்களில் ஒருவர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தோனியின் சொந்த மாநிலம் வேறாக இருந்தாலும், தமிழ்நாட்டில் ஒருவராக மாறியிருக்கிறார். தமிழர்கள் பச்சை தமிழர் என்றால், தோனி மஞ்சள் தமிழர். டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தோனிதான்.

சாதாரண பின்புலத்துடன் உச்சம்தொட்ட தோனி ஒவ்வொரு தமிழரின் மனதிலும் இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் இன்னும் பல சீசன்களில் தோனி விளையாட வேண்டும். எப்போது இலக்குதான் முக்கியம், அதை அடைய உழைப்பு தான் மிக முக்கியம். நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள். நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடருகிறோம் என்று தெரிவித்தார். முன்னதாக பேசிய தோனி, தமிழ்நாடு மற்றும் சென்னை தனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது என்றும் தன் முதல் டெஸ்ட் போட்டியை சென்னையில் தான் விளையாடியதாகவும் தனக்கு சிறந்த நினைவுகளை சென்னை தந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தன்னுடைய கடைசி டி20 சென்னையில் தான் நடக்கும் என நம்புவதாக தெரிவித்த அவர், அடுத்த வருடமாக இருந்தாலும் ஐந்து வருடமாக இருந்தாலும் தனது கடைசி போட்டி சென்னையில் தான் என்று தெரிவித்தார். 

click me!