தமிழக ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா.. பங்கேற்காத திமுக அமைச்சர்கள்.. தொடரும் புறக்கணிப்பு?

Published : Apr 18, 2022, 10:20 PM IST
தமிழக ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா.. பங்கேற்காத திமுக அமைச்சர்கள்.. தொடரும் புறக்கணிப்பு?

சுருக்கம்

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், விழாவை தமிழக அரசு பங்கேற்காமல் புறக்கணித்தது. இதேபோல திமுக கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தைப் புறக்கணித்தன.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர்கள் பொன்முடியும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் புறக்கணித்ததாக அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆளுநர் பங்கேற்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 84-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் வேளாண் துறை அமைச்சரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகம் அளித்திருந்த அழைப்பிதழிலும் அமைச்சர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இன்று மாலை 4 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்கிய நிலையில் அமைச்சர்கள் வராமல் இருந்தனர்.

பங்கேற்காத அமைச்சர்கள்

விழா தொடங்கிய பிறகு அமைச்சர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர்கள் இருவரும் கடைசி வரை வரவே இல்லை. அமைச்சர்கள் மட்டுமல்ல, சிதம்பரம் நகராட்சித் தலைவர், அண்ணாமலைநகர் பேரூராட்சித் தலைவர் உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை. இதன்மூலம் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை ஆளும் திமுகவினர் புறக்கணித்துள்ளனர். தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், விழாவை தமிழக அரசு பங்கேற்காமல் புறக்கணித்தது. இதேபோல திமுக கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தைப் புறக்கணித்தன.

அமைச்சர்கள் புறக்கணிப்பு

இதன்மூலம் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு மசோதா, கூட்டுறவு சங்க திருத்த மசோதா உள்பட 11 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதனால், நாடாளுமன்றத்தில் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். ஆளுநரை விமர்சித்து திமுகவின் பத்திரிகையான ‘முரசொலி’யில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. ஏற்கனவே தேநீர் விருந்தைப் புறக்கணித்த நிலையில் தற்போது பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளனர். ஆனால், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளதால் விழாவுக்கு அமைச்சர்களால் செல்ல முடியவில்லை என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!