முன்பு ரஜினி.. இப்போது இளையராஜா.. இரக்கமற்று தோலுரிக்கும் தமிழ் மண்.. ஜோதிமணி ஆவேசம்.!

Published : Apr 18, 2022, 08:02 PM IST
முன்பு ரஜினி.. இப்போது இளையராஜா.. இரக்கமற்று தோலுரிக்கும் தமிழ் மண்.. ஜோதிமணி ஆவேசம்.!

சுருக்கம்

ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச, பிரிவினைவாத, வன்முறை சித்தாந்தம் ஊடுருவும் பல வழிகளில் இதுவும் ஒன்று. சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை தனக்கு ஆதரவாகப் பேசவைப்பது. அதற்கென்று ஒரு விலையையும் அது வைத்திருக்கும். 

ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச சித்தாந்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களை, இரக்கமற்று தோலுரித்து தொங்கவிடும் வழக்கமுடையது தமிழ் மண் என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

மோடிக்கு இளையராஜா புகழாரம்

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியுள்ளார். 

ஜோதிமணி கருத்து

இளையராஜாவின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு சாரார் இளையராஜாவை விமர்சித்தும், அவருக்கு கண்டனம் தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இளையராஜாவை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்போது பாஜகவினர் பதிலடி தரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கரூர் காங்கிரஸ் எம்.பி. இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் ஆத்மார்த்தமான அடையாளங்களில் ஒன்று. அதற்காக அவரை நாம் என்றென்றும் நேசிப்போம். ஆனால், அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது.

முன்பு ரஜினி, இப்போது இளையராஜா

ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச, பிரிவினைவாத, வன்முறை சித்தாந்தம் ஊடுருவும் பல வழிகளில் இதுவும் ஒன்று. சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை தனக்கு ஆதரவாகப் பேசவைப்பது. அதற்கென்று ஒரு விலையையும் அது வைத்திருக்கும். முன்பு ரஜினிகாந்த், இன்று இளையராஜா. ஆனால் தமிழ் மண் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் மிகுந்தது. அன்பை, அமைதியை, ஒற்றுமையை, வளர்ச்சியை விரும்புவது. இதற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச சித்தாந்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களை, இரக்கமற்று தோலுரித்து தொங்கவிடும் வழக்கமுடையது. இளையராஜாவுக்கும் அதுதான் நேர்ந்துள்ளது.

ஒரு கருத்தைக் கூறுவது ஒருவரின் உரிமை. அந்தக் கருத்து சமூகத்திற்கு எதிராக இருக்குமென்றால் அதற்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். கருத்துரிமையும், விமர்சிக்கும் உரிமையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இன்று இளையராஜாவிற்காக கருத்துரிமைக் காவலர் வேடம் பூண்டுள்ள பாஜக, ஏன் மக்கள் விரோத மோடி அரசிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களின் கருத்துரிமைக்கு எதிராக அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது?” என்று ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!