அரசு கேபிள் கட்டணம் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது தெரியுமா ? முழு விவரம் வெளியீடு !!

By Selvanayagam PFirst Published Aug 1, 2019, 8:46 AM IST
Highlights

அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை அதிரடியாக குறைத்து முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் தற்போது மாதம் ஒன்றுக்கு 106 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்தான்  தமிழக அரசும், கேபிள் டி.வி. தொழிலில் இறங்கியது. இதற்காக கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வகுத்த புதிய வரைமுறையின்படி, கேபிள் டி.வி. கட்டணம் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.

மாதம் ரூ.130 கட்டணத்தில் பல்வேறு டி.வி. சேனல்களை கண்டுகளித்த மக்கள் இன்று, ரூ.250 செலவு செய்தும் குறிப்பிட்ட சேனல்களை மட்டுமே பார்க்க முடிகிறது. எனவே கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.

இந்தநிலையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு கேபிள் டி.வி. தலைமை அலுவலகத்தில் கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான கேபிள் டி.வி. ஆபரேட்டர் குழு நிர்வாகிகள், தாசில்தார்கள், கட்டண சேனல்கள் உரிமையாளர்கள் ஆகியோருடன் அமைச்சரும், அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் சங்கர் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

இந்தநிலையில் அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை அதிரடியாக குறைத்து தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 

அதில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், இதுவரை 36 லட்சம் ‘செட்-டாப்’ பாக்ஸ்கள் கொள்முதல் செய்து, சுமார் 35 லட்சத்து 12 ஆயிரம் ‘செட்-டாப்’ பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் (வேலூர் மாவட்டம் நீங்கலாக) வருகிற 10-ந்தேதி முதல் ரூ.130+ஜி.எஸ்.டி. என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது அரசு கேபிள் டி.வி. கட்டணமாக மாதம் ரூ.220+ஜி.எஸ்.டி. கட்டணம் சேர்த்து ரூ.259.60 வசூலிக்கப்பட்டது. கட்டண குறைப்பு மூலம் இனி ரூ.153.40 வசூலிக்கப்படும். இதன்படி கட்டணம் ரூ.106 அதிரடியாக குறைகிறது. 

click me!