கடந்த ஆண்டு நடைபெற்ற ஆளுநர் உரையில் கூடுதல் வார்த்தைகளை சேர்த்தும், வார்த்தைகளை தவிர்த்தும் ஆளுநர் ரவி உரையாற்றிய நிலையில், அதற்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவந்தார். இதனையடுத்து நாளை மீண்டும் ஆளுநர் உரையுடன் கூடிய கூட்டம் தொடங்கப்படவுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டபேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் நாளை (திங்கள் கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது.இதற்காக ஆளுநர் ஆர். என். ரவி படிக்க வேண்டிய ஆங்கில உரை, தயாரிக்கப்பட்டு, கடந்த வாரம் அவரிடம் நேரில் அளிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவும் , ராஜ்பவன் சென்று, ஆளுநர் உரையாற்ற வரும்படி முறைப்படி அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து சட்டசபை கூட்ட அரங்கம் அமைந்துள்ள கட்டிடத்தின் முகப்பு பகுதி, கவர்னர், சபாநாயகர் வரும் வாசல்கள், எதிர்கட்சித் தலைவர் அறை அமைந்துள்ள பகுதி, உறுப்பினர்கள் வரும் பகுதிகளில் வெள்ளை அடித்து புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மேலும் மரபுப்படி குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர் ஆகியோர் வந்தால் மட்டுமே திறக்கப்படும் சட்டசபை செயலக மூன்றாம் நுழைவு வாயில் (கேட் நம்பர் 3) கதவுகள் வார்னிஷ் அடித்து புதுப்பிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை
இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான உரை நிகழ்த்துவதற்காக திங்கட்கிழமை காலை 9.57மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டசபை செயலகம் வருகிறார். அவரை நுழைவு வாயிலில் சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். இதன் தொடர்ந்து சிவப்பு கம்பள மரியாதையுடன் உரை நிகழ்த்த வரும் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.
பின்னர் சபை மார்ஷல் முன் செல்ல, சபாநாயகர், சட்டசபை செயலர் ஆகியோரை கவர்னர் ஆர்.என். ரவி பின் தொடர்வார். சபையில் சபாநாயகர் இருக்கைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன் பிறகு கவர்னர், தன்னுடைய உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார். அவர் உரை நிகழ்த்தி முடிந்ததும், கவர்னர் உரையின் தமிழாக்கத்தை, சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். தேசிய கீதத்துடன் அன்றைய சபை நிகழ்வுகள் நிறைவடையும்.
உரையை புறக்கணிப்பாரா ஆளுநர் ரவி.?
கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அப்போது தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளது என்ற வாசகத்தை தவிர்த்தார். இதே போல பெரியார், அண்ணா உள்ளிட்ட வாக்கியங்களை தவிர்த்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஆளுநர் சபையில் இருக்கும் பொழுதே ஆளுநர் ரவிக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதனையடுத்து சட்டசபை கூட்டத்தில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார். எனவே அதுபோன்ற நிகழ்வுகள் இம்முறை நடைபெறுமா ? அல்லது அரசு தயாரித்த முழு உரையையும் கவர்னர் வாசிக்கிறாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்