வெளியிலிருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறியபோது தான், பிரச்னை உருவானதகா தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் என விமர்சித்தார்.
வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழா
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, 10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்படைந்ததாக தெரிவித்தார். 200 ஆண்டுகளுக்கு முன் காரிருளை நீக்க வந்த ஜோதிதான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளானபோது தோன்றியவர்தான் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது.
சனாதன தர்மம் என்றால் என்ன.?
அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள். சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள் என தெரிவித்தார். அடிப்படையில் உண்மை என்பது ஒரே பரமேஸ்வரன். அவன் படைத்த மனிதன், விலங்குகள், செடி, கொடிகள் என அனைத்தும் ஒரே குடும்பம். இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களின் உடையும், தோற்றமும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், உங்களில் என்னையும் என்னில் உங்களையும் காண்பதுதான் சனாதன தர்மம் என தெரிவித்தார். ஆன்மிகத்தில் உயர்ந்த நாடு இந்தியா. பாரத தேசத்தில் ஆயிரக்கணக்கான மார்க்கங்கள், வழிபாட்டு முறைகள் இருந்தன.
நமது அடையாளத்தை அழிக்க நினைத்தவர்கள்
யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அதைத்தான் சனாதன தர்மம் போதிக்கிறது. இந்தநிலையில் வெளியிலிருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான், பிரச்னை உருவானது. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் என குற்றம்சாட்டினார்.இந்திய சமூகக் கட்டமைப்பை குலைக்க நினைத்த கார்ல் மார்க்ஸ் ஆங்கிலேயருக்கு உதவியவர். இந்தியர்களை பற்றி தவறாக எழுதி வைத்திருப்பவர் கார்ல் மார்க்ஸ் என ஆளுநர் ரவி விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்