
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 11 நாட்களாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபடுபட்டு கைதானவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் எனவும், கதிராமங்கலம் தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.