
ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய் மின் திட்டத்தை, அவர் மறைந்த 30 நாட்களுக்குள்ளாகவே கையெழுத்திட்டு உள்ளுக்குள் ஏதோ மர்ம மாற்றங்கள் நடந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டியது அப்போதைய ஓ.பி.எஸ். அரசு.
உதய் திட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என பிடிவாதமாக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஜெயலலிதாவின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் கையெழுத்திடப்பட்டது.
இந்த உதய் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருபவர் மத்திய அமைச்சராக இருக்கும் பியூஸ் கோயல். இந்திய முதலமைச்சர்களிலேயே மோசமானவர் ஜெயலலிதாதான் என்று வெளிப்படையாக கூறியவர் பியூஸ் கோயல்.
எதிர்கருத்துக் கொண்ட நிதிஷ் குமாரையே பார்த்துவிடுகிறேன், ஆனால் ஜெயலலிதாவின் அப்பாய்மென்ட்தான் கிடைப்பதில்லை. மத்திய அமைச்சர்களை சந்திப்பதில் மோசமாக நடந்து கொள்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த சமயத்தில், பியூஸ் கோயலின் பேட்டியைக் கேட்ட ஜெயலலிதா கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தார். பின்னர் பல மாதங்கள் கழித்து அவரை சந்தித்தார் என்பது தனிக்கதை. காலங்கள் உருண்டோடி தற்போது, எடப்பாடி அரசு 100 நாட்களை கடந்த நிலையில் மத்திய பாஜக அரசிடம் மிகுந்த நெருக்கம் காட்டுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
ஜெ.வை எதிர்த்த அதே பியூஸ் கோயலுடன் அமைச்சர் தங்கமணியும், பாஜக தமிழக தலைவர் தமிழிசையும் ஒன்றாக நின்று கொண்டு பேட்டி அளித்துள்ளனர். மின்சாரம் நிலக்கரி புதுப்புக்கப்படும் எரிசக்தி துறையை கையில் வைத்திருக்கும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று சென்னை வந்தார்.
பீயுஸ் கோயலை, அமைச்சர் தங்கமணி மற்றும் அதிகாரிகள் சந்தித்து சுமார் 3 மணி நேரமாக ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், மின்சாரத்தை சேமிக்கும் திட்டத்திற்காக தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றார்.
மத்திய அமைச்சர் பேட்டி அளிக்கும்போதும் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, மற்றொரு புறத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர். இரண்டு அமைச்சர்கள் சரி, மாநில பாஜக தலைவர் இங்கு எங்கே வந்தார்? என சில அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பியது அங்கு காண முடிந்தது.
இந்த காட்சிகள் எல்லாம் ஜெயலலிதா இருந்திருந்தால் நடந்திருக்குமா...?