ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்கும் நோக்கத்தில்தான் அரசின் செயல்பாடு இருக்கிறது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு...

First Published May 24, 2018, 10:29 AM IST
Highlights
government taking process of protecting Sterlite plant - TTV Dinakaran ...


திருச்சி
 
ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எடப்பாடி அரசு செயல்படுகிறது என்று டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார்.

மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைப்பெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், மனோகரன், ராஜசேகரன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் பங்கேற்றனர்.

சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபின்னர், டி.டி.வி.தினகரன் தான் வந்த வேனில் இருந்தபடியே சிலை அருகில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அதில், "தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மத்திய அரசின் ஏஜெண்டாக, அடிமை அரசாக, கையாலாகாத அரசாக இருப்பதையே இது காட்டுகிறது. 

முதலமைச்சர் உள்பட அமைச்சர்களுக்கு மக்கள் பிரச்சனைகளை எப்படி கையாளுவது என தெரியவில்லை. காவல்துறைக்கு அமைச்சராக உள்ள முதலமைச்சர்தான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

காவலாளர்கள் முதலில் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை செய்யாமல், போராட்டம் நடத்திய மக்களை குருவியை சுடுவதுபோல் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். 

மக்களை மதிக்காமல், அவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காமல், ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த அரசு செயல்படுகிறது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளது. 

இதுபோன்ற ஒரு நிலை தொடர்ந்தால் எங்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டியது வரும்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது பதவியில் உள்ள சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து, விசாரணை நடத்தினால்தான் சரியாக இருக்கும்.

இந்த போராட்டத்தை மு.க.ஸ்டாலின் தூண்டி விடுவதாக கூறும் அமைச்சர் ஜெயக்குமார், அதனை தடுத்து நிறுத்த தவறியது ஏன்? 

இந்த தூண்டுதல் பற்றி உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தகவல் பெறாதது ஏன்? 

உளவுத்துறை ஐ.ஜி. என்ன செய்து கொண்டிருக்கிறார்? 

கியூ பிராஞ்ச் காவலாளர்கள் என்ன செய்கிறார்கள்? என்று அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
 

click me!