தூத்துக்குடி துப்பாக்கி சூடு ….. அடுத்தடுத்து தொடரும் மரணங்கள்… பலி 13 ஆக உயர்வு…..

First Published May 24, 2018, 10:01 AM IST
Highlights
Tuticorin gun fire death roll increase to 13


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த ஆலையை அடுத்துள்ள குமரெட்டியாபுரம் பொது மக்கள தொடர்ந்து 100 நாட்களாக போராடி வருகின்றனர். முதலில் அந்த கிராம மக்கள் மட்டுமே போராடி வந்த நிலையில், அடுத்தடுத்துள்ள கிராம மக்களும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர்.

இதையடுத்து நடைபெற்ற பிரமாண்டமான ஊர்வலம் தமிழகம் முழுவதையும் தூத்துக்குடி பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அரசியல் கட்சியினர், திரைத் துறையினர் உள்ளிட்டோர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக திரும்பினர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அங்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு  சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது.



கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தவர்கள் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி தீவைத்து எரித்தனர். அலுவலக கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்கள். இதனால் போலீசார் கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் 9 பேர் பலி ஆனார்கள். மேலும் திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி ஆனார். இந்த இரு சம்பவங்களிலும் பலர் காயம் அடைந்தனர். 



மேலும் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் (50) என்பவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.

வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக பதற்றம் நிலவியது.  மேலும் இந்த சம்பவத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 



இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த செல்வ கணேஷ் என்பவர் அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. 

click me!