
பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்க சட்டம் கொண்டுவரப்படுவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம்
தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்டமசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் தாக்கல்
குஜராத்,தெலங்கானவில் அம்மாநிலங்களின் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் துணைவேந்தர் நியமனம் நடைபெற்று வருகிறது, அதேபோல் தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்து அதற்கான சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்வதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாமக ஆதரவும் வரவேற்பும் தெரிவித்துள்ளது.
வரவேற்கும் அன்புமணி
இதுதொடர்பாக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
பல்கலைக்கழக நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தடுக்க துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.