ஆளுநரின் அதிகாரத்தில் கை வைத்த மு.க. ஸ்டாலின்.. ஜெயலலிதா அன்று எடுத்த அதே முடிவு.. 1995-இல் நடந்தது என்ன?

By Asianet TamilFirst Published Apr 26, 2022, 8:14 AM IST
Highlights

முதல்வர் ஜெயலலிதாவுக்கும் - ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் கடுமையாக மோதல் போக்கு இருந்தபோது பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்து அதிர வைத்தார் ஜெயலலிதா.

கடந்த 1995-ஆம் ஆண்டில் ஆளுநரின் வேந்தர் அதிகாரத்தை தமிழக முதல்வருக்கு மாற்றி ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை தற்போது முதல்வர் ஸ்டாலினும் கையில் எடுத்துள்ளார்.

ஆளுநர் - முதல்வர் மோதல்

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் - மாநில அரசுக்கும் இடையே மோதல் நடப்பது பல ஆண்டுகளாக நீட்டித்து வரும் பிரச்சினை. தற்போது தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி என பல மாநிலங்களிலும் ஆளுநர்கள் - முதல்வர்கள் இடையே உரசல்கள் இருக்கின்றன. இதுபோன்று மாநில அரசுகளுடன் ஆளுநர்கள் மோதல் போக்கைக் கையாளும்போது, ஆளுநர்களுக்கு எதிர்ப்பைக் காட்ட சில நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்வதும் உண்டு. அந்த வகையில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான நகர்வுகளில் தமிழக அரசும் இறங்கியுள்ளது.

இந்தியாவில் ஆளுநர்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாகவும் இருக்கிறார்கள். மாநில அரசோடு மோதல் முற்றும்போது, அந்த அதிகாரத்தில் மாநில அரசுகள் கை வைக்கும் முடிவுகளை எடுக்கின்றன. மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் பல்கலைக்கழகங்களின் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் குஜராத்திலும் பல ஆண்டுகளாகவே துணைவேந்தர்களை மாநில அரசுதான்  நியமித்து வருகிறது. சட்டத் திருத்தத்தின் மூலம் தேர்வுக்குழு பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவரை மட்டுமே துணைவேந்தராக ஆளுநரால் தேர்வு செய்ய முடியும் என்று மாற்றப்பட்டது. இதற்கு முன்பு வரை தேர்வுக் குழுவின் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் ஆளுநர் தன் விருப்பப்படி ஒருவரை துணைவேந்தராக நியமித்தார். அந்த அதிகாரத்தில்தான் மகாராஷ்டிர அரசு கை வைத்தது.

ஜெயலலிதா செய்தது என்ன?

தற்போது திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது. இதற்கும் முன்னோடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கும் - ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் கடுமையாக மோதல் போக்கு இருந்தபோது பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்து அதிர வைத்தார் ஜெயலலிதா. இது 1995-ஆம் ஆண்டில் நடந்தது. 27 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்து செய்துகாட்டியவர் ஜெயலலிதா.

ஆளுநரின் அதிகாரத்தில் கை வைத்த அந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளித்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். 1995-இல் ஜெயலலிதா இயற்றிய இந்தத் திருத்தச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவருடைய ஒப்புதலுக்காக மசோதா காத்திருந்தது. பல மாதங்கள் அந்த சட்டத் திருத்த மசோதா கிடப்பில் கிடந்தது. அந்த நேரத்தில்தான் 1996 சட்டப்பேரவைத் தேர்தலும் வந்தது. தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. பெரும் வெற்றி பெற்ற கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முந்தைய அரசின் மசோதாக்கள் நிலுவையில் இருந்தால், அதைப் புதிதாக பதவியேற்ற அரசும் ஒப்புதல் கோரி அணுகுவதுண்டு. ஆனால், அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநருக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்கவில்லை. அதனால், அந்தச் சட்டத் திருத்தத்துக்கு அமலுக்கு வராமலேயே போனது. 

அன்று ஜெயலலிதா எடுத்த அதே முடிவைதான் ஸ்டாலினும் செய்து முடித்திருக்கிறார். இந்த முறையாவது இந்த திருத்த சட்டம் அமலுக்கு வருகிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆளுநர் ரவி-முதல்வர் ஸ்டாலின் மோதல் சாதாரண ரகம்... சென்னா ரெட்டி-ஜெயலலிதாவின் அதிர வைத்த மோதல்.. ஒரு பிளாஷ்பேக்

click me!