நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் பல்லடத்தில் நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணி ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் முதல் கட்ட பேச்சுவாரத்தை முடிவடைந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. மேலும் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு தலா இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு வாரத்தில் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
பாஜக கூட்டணியில் தமாகா
இந்த நிலையில் அதிமுக- பாஜக என இரண்டு தரப்பும் கூட்டணியை இன்னும் இறுதி செய்யவில்லை, இரண்டு கட்சிகளும் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் அணிக்கு இழுக்க போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தது. தற்போது பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாக அக்கட்சியிலன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் நாளை பல்லடத்தில் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பதாக கூறியுள்ளார்.