கடந்த 7 ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் தனக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டதாக தெரிவித்த விஜயதாரணி, பாஜகவை பொருத்தவரை எவ்வளவு பெண் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இருக்கிறார்கள்? அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை
தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், 3 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் கடந்த வாரம் இணைந்தார். இதனையடுத்து நேற்று டெல்லியில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த விஜயதாரணிக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
undefined
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளேன். ஆனால் அங்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன. பெண்களுக்கு உண்டான தளம் என்பது காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. என்னை தவிர வேறு எந்த பெண்ணும் சட்டமன்ற உறுப்பினராக கூட ஆக முடியவில்லை. என்னை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு உள்ளது.
அங்கீகாரம் மறுக்கப்பட்டது
. 37 ஆண்டுகள் எந்த கட்சிக்கும் செல்லாமல் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினேன். ஆனால் இந்த முடிவிற்கு வந்திருப்பதே புரிந்து கொள்ள வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை பார்த்தேன். ஆனால் தலைமை பதவி என வந்தால் பெண்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் தவறானது. ஏன் பெண்களால் எதுவும் செய்ய முடியாதா? நிச்சயமாக முடியும். அதில் அவநம்பிக்கை கொண்டவர்கள் தான் காங்கிரஸ் கட்சி. கடந்த 7 ஆண்டுகளாகவே எனக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது. பாஜகவை பொருத்தவரை எவ்வளவு பெண் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இருக்கிறார்கள்? அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். பெண்களுக்கும் தலைமை பண்பு இருக்கிறது என்பதை உணர்ந்த கட்சி பாஜக. அதன்வெளிப்பாடே எனது நிலைப்பாடுவிற்கு காரணம். அதனால் தான் என்னை பாஜகவில் இணைத்து கொண்டேன்.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைகிறது
பிரதமர் மோடி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை சட்டமாக்கியுள்ளார். இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் பங்கு தந்துள்ளார். முத்தலாக்கை தடை செய்துள்ளார். அதனால் இஸ்லாமிய பெண்கள் பாஜகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள். அவர்கள் மனதை மாற்ற முடியாது. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பதவி தருவதில்லை. பெண்களுக்கு பதவி தர மறுப்பது உண்மை தான்.
அண்ணாமலை யாத்திரை மற்றும் சீரிய முயற்சியால் பாஜக பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. அதுதான் என்னை போன்றவர்கள் பாஜகவில் இணைய காரணம். நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கும் கட்சியாக பாஜக வளர்கிறது. அண்ணாமலை தான் எதிர்கட்சியாக செயல்படுகிறார். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
பெண் என்பதால் பதவி தரவில்லை
நான் விருப்பப்பட்டு தேசிய கட்சி என்ற முறையில் என்னை இணைத்து கொண்டுள்ளேன். பாஜகவில் யார் யார் எல்லாம் இணைகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. 37 வருடம் பணியாற்றிய காங்கிரஸ் கட்சி எனக்கு துரோகம் செய்தது. பெண் என்பதால் எனக்கு பதவி தரவில்லை. இப்போது டிவியில் பேட்டி தருகிறவர்கள், ஒரு போன் கூட பண்ணவில்லை. தவறு நடந்தால் தட்டி கேட்கும் ஆளாக இருந்திருக்கிறேன். எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் காணாமல் போகும் நிலையில் காங்கிரஸ் உள்ளதாக விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்