சீட் கொடுக்கவில்லை, மதிப்பு கொடுக்கவில்லையென கூறி கட்சி தாவும் நிகழ்வு தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக பாஜகவிற்கு முக்கிய அரசியல் கட்சி தலைவர் செல்ல இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் நிகழ்வு ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், சீட் கிடைக்கவில்லை, உரிய மதிப்பு கொடுக்கவில்லையென கூறி தலைவர்கள் கட்சி மாறும் நிகழ்வும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் முதல் எம்எல்ஏவரை கட்சி மாறி வருகிறார்கள். தமிழகத்திலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த மாஜி எம்எல்ஏக்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்க்குள் பாஜகவை சேர்ந்த நடிகை கவுதமி, சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த பாத்திமா அலி அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்த சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகியும், 3 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதாரணி திடீரென பல்டி அடித்து பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையெனவும் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அடுத்தாக யார் எந்த கட்சிக்கு மாற தயாராக இருக்கின்றனர் என்ற தகவல் வெளியானது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சரஸ்வதிக்கும் பாஜக தலைமைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியது. ஆனால் இந்த தகவலை எம்.எல்.ஏ சரஸ்வதி தரப்பு மறுத்துள்ளது.இதே போல முன்னாள் அமைச்சர் மாபாய் பாண்டியராஜன் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் தன்னுடைய எக்ஸ் தளத்தில் என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன் உறுதியுடன் உண்மையுடன் என பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.
இதே போல கோவையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.ப.ரோகிணி பா.ஜ.கவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில் இறுதி மூச்சு உள்ளவரை அம்மா காட்டிய திசையில்தான் பயணிப்பேன் என தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தை சேர்ந்த மிகபெரிய அரசியல் தலைவர் பாஜகவில் இணைய இருப்பதாக அண்ணாமலை தொடர்ந்து கூறிவருகிறார். அந்த தலைவர் யார்.? எந்த கட்சியில் இருந்து செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை முயற்சியால் பாஜக பெரிய வளர்ச்சியடைந்துள்ளது.. காணாமல் போகும் நிலையில் காங்கிரஸ்- விஜயதாரணி