
ஆயிரக்கணக்கான விருதுகள்.. கோடிக்கணக்கான ரசிகர்கள்.. காற்று முழுக்க அவரின் பாடல்கள்.. 60 ஆண்டுகால உழைப்பு, 20 மொழிகளில் பாடல்கள் இந்த மொத்த சாதனைகளையும் கூட்டிக் கழித்தால் கிடைக்கும் பெயர்தான் இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
இந்த ஒரே ஒரு பெயர் இந்தியாவின் ஒட்டுமொத்த இசை உலகையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. இறைவனுக்கு குரல் என்று ஒன்று இருந்திருந்தால் அது லதா மங்கேஷ்கரின் குரலாகவே இருந்திருக்கும் என்று சொல்லும் அளவிற்கு காந்தக் குரலால் ரசிகர்களை மயக்கி வைத்துள்ள குரல்தான் மங்கேஷ்கர். ஒரு பாடலை கேட்டு தற்கொலையை தள்ளிப்போட்டி ருப்பவர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள், ஒரு பாடலை கேட்டு பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்ந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள், ஒரு குரல் தான் வாழ்வது மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தவர்களையும் வாழ வைக்கும் அதிசயம் என்றால் அது மங்கேஷ்கர் குரல்தான். 60 ஆண்டுகாலம் தனது காந்த குரலை கவிதைகளாய் காற்றில் உலவ விட்டுள்ள இந்த கான குயில் தான், இப்போது மூச்சு விடக்கூட முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. இந்த செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் இல்லை இந்திய தேசத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ளது.
யார் இந்த நத்தம் மங்கேஷ்கர்:-
குமாரி லதா தீனாநாத் மங்கேஷ்கர், 1929 செப்டம்பர் 28 அன்று மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பிறந்தார். அவரது தந்தை பெயர் தீனாநாத் மங்கேஷ்கர். அவர் திறமையான நாடக பாடகர் ஆவார். லதாவுக்கு 5 வயது இருக்கும் போதே அவருக்கு இசை கற்றுக் கொடுத்தார் தீனாநாத் அவருடைய சகோதரிகள் ஆஷா , உஷா மற்றும் மீனா ஆகியோரும் அவருடன் இசைப் பயின்றார்கள். ஆரம்பத்தில் அவருக்கு நடனத்தில் தான் ஆர்வம் ஆனால் காலம் செல்ல செல்ல அவருக்குள் இருந்த ஆன்மா இசை வடிவத்தின் பின்னால் அவரை அறியாமல் சென்று கொண்டிருந்ததை, தனக்குள் மிகப்பெரும் இசை ஆர்வம் இருப்பதை கண்டு கொண்டால் லதா, அப்போது அவருக்கு வயது 6 , ஆரம்பத்தில் தன் தந்தையிடம் இசை பயின்ற லதா மங்கேஷ்கர் பிறகு புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் அம்மான் அலிகான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோர் இடம் இசைப்பயிற்சி பெற்றார். பெரிய அளவில் வசதியான குடும்பம் இல்லை என்றாலும், ஓரளவிற்கு சாப்பாட்டிற்கு பிரச்சனை இல்லாத குடும்பம். தந்தையின் வருமானம் தான் மொத்த குடும்பத்தையும் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தது.
லதா மங்கேஷ்கருக்கு எப்போதுமே கடவுள் கொடுத்த குரல் மெல்லிசை குரல், கலகலப்பாக பழகக்கூடியவர், எந்த விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் இந்த குணாதிசயங்களால் அவரது திறமை மிக விரைவில் அங்கீகரிக்கப்பட்டது. அப்போதுதான் தனியாளாய் குடும்ப பாரத்தை சுமக்க கஷ்டப்படும் தந்தைக்கு உதவியாக இருக்க லதா மங்கேஷ்கர் முடிவு செய்தார், பாடல் பாடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தந்தைக்கு உதவி செய்ய முடி செய்தார். அதற்கு ஏற்றார் போல் அவருக்கு 1942 ஆம் ஆண்டு இசைப்பயணத்தை துவக்கி வைக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலாக கிர்தி அசல் என்ற மராத்தி பாடலை பாடினார். இனி தொடர்ந்து வாய்ப்புகள் வரும் குடும்பத்தை பொருளாதார அளவில் முன்னேற்றி விடலாம் என்று நினைத்திருந்த போது அவரது தந்தை இறந்துவிட்டார். அப்போது லதா மங்கேஷ்கருக்கு 13 வயது. இப்போதுதான் குடும்பத்தின் மூத்த மகளான லதா மங்கேஷ்கர் ஒட்டு மொத்த குடும்ப பாரத்தையும் தாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அப்போது அவரிடம் இருந்த ஒரே ஆயுதம் அவரின் குரல் மட்டும்தான். தன் குரலை வைத்து பொருளாதாரத்தை சரிசெய்துவிட முடியும் என உறுதியாக நம்பினார். அதே நேரத்தில் நவியுக் சித்திர பட் பிலிம் கம்பெனியின் உரிமையாளரும் அவரது தந்தையின் நண்பருமான மாஸ்டர் விநாயக் தாமோதர் (கர்நாடகம்) அவரின் குடும்பத்தை கவனித்துக் கொண்டு லதா மங்கேஷ்கரை பாடகியாகவும் நடிகையாகவும் ஆக்கினார். அதேபோல இசை அமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் மஜ்பூர் என்ற திரைப்படத்தில் பாட அவருக்கு வாய்ப்பு அளித்தார். இது அவரின் ஒட்டுமொத்த வாழ்வையும் திருப்பி போட்டது. அதில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல் மிகப்பெரிய வெற்றி பெறவே மஹால், அந்தாஸ், ஹர்ஷாத், துளாரி போன்ற படங்களில் லதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் பாடல் உலகின் லதா மங்கேஷ்கர் தனித்து கவனிக்கப்பட்டார்.
சஜா, தேவதாஸ், பைஜு பவ்ரா, சோரி சோரி என அடுத்தடுத்த படங்களில் இவர் பாடிய பாடல் ஹிட் ஆகவே லதா மங்கேஷ்கர் பாடினால் அந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் நினைக்கத் துவங்கி விட்டனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 1954 ஆம் ஆண்டிலேயே கதவு எண் 44 என்ற தமிழ் படத்தில் மங்கேஷ்கர் பாடிவிட்டார். அந்த அளவு இந்தியாவே அவரின் குரலில் சொக்கி கிடந்தது. எப்படியாவது குடும்ப வறுமையைப் போக்கி விடலாம் என்று துடித்த பெண்ணுக்கு, இந்தியாவின் மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் அவரின் நேரத்திற்காக காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. அதாவது கடும் உழைப்பு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என்பதற்கு சிறந்த உதாரணம்தான் அது. குடும்ப வறுமை நீங்கி விட்டது, வசதி வந்துவிட்டது, வணிக ரீதியாக படங்கள் வெற்றி பெற்றாலும், தனக்கென முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் லதாவிடம் இருந்தது.
ஆனால் அந்த கவலை நீங்கும் வகையில் சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த மதுமதி திரைப்படத்தில் லதா பாடிய ஆஜாரே பரதேசி என்ற பாடல் இவருக்கு முதல் பிலிம்பேர் விருதை வாங்கி தந்தது. அடுத்தடுத்து பல விருதுகளை வாங்க தொடங்கினார் லதா, எத்தனை விருதுகள் வாங்கினாலும் தேசிய அளவிலான அங்கீகாரத்தையே அவரது மனம் எதிர்பார்த்தது. 1973ஆம் ஆண்டு ஆதி பர்மன் இசையமைத்து வெளிவந்த pakeezha என்ற படத்தில் இவர் பாடிய பீதினா டீடே என்ற பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான முதல் தேசிய விருதை லதாவுக்கு பெற்றுத்தந்தது. சினிமா இசை மட்டுமல்லாது ஆத்மார்த்த இசை வடிவத்தையும் கையில் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 1961 பஜனை பாடல்கள் அடங்கிய ' அல்லா தேரே நாம்' மற்றும் ' பிரபு தேரே நாம்' என இரண்டு ஆல்பங்களை வெளியிட்டார் லதா மங்கேஷ்கர். 1974இல் மீராபாய் பஜன், ஷங்கரே ரங்கராஜ், ஜோ பூஜாரேகாக, 2007இல் சாத்கி என்ற ஆல்பத்தையும் 2012இல் தனது சொந்தப் பெயரில் ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டார் லதா மங்கேஷ்கர்.
இவரின் ஆல்பத்தில் வெளியே வந்த பாடல்களே இன்றும் வட இந்தியர்களின் பூஜை பாடல்களாக இருந்து வருகிறது. பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராக ஆயுதத்தையும் கையிலெடுத்தார். 1960 ராம் ராம் பவானா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கால்பதித்த லதா மங்கேஷ்கர் மராத்தா டிடுக்கா மேல் வா வா, சதி மானசே, தம்பாடி மடி உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் இசை அமைத்தார். இதற்காக மராத்தி அரசின் விருதையும் பெற்றார். அதேவேளையில் தயாரிப்பாளராகவும் மாறினார். ஒரு சாதனையை முறியடித்து அடுத்த சாதனைக்காக உழைத்துக் கொண்டிருப்பது அவரின் தனித்துவம் எனலாம், இதனால் பத்மபூஷன், பத்மவிபூஷன் நாட்டில் உள்ள அனைத்து விருதுகளையும் லதாவின் வீட்டு முகவரியை தேடி வந்தன. இதுமட்டுமின்றி 1999ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் லதா மங்கேஷ்கர். 2001-ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் மத்திய அரசு வழங்கி அவரை கௌரவித்தது.
திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, 3 தேசிய விருதுகள், ஆறு பல்கலைக்கழகங்களின் விருதுகள், டாக்டர் பட்டங்கள் என பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்று சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார் லதா மங்கேஷ்கர். தேனிசை குரலுக்குச் சொந்தக்காரரான ஆஷா போஸ்லே லதாவின் தங்கை என்பது கூடுதல் சிறப்பு. 13 வயதில் பாட வந்த இந்த கான குயில் 20 மொழிகளில் பாடி இசை உலகத்தையே கட்டிப்போட்டது வரலாறு. இவ்வளவு பெரிய வெற்றிக்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் உண்டு, ஒன்று ஓயாத உழைப்பு, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற தேடல் கொண்ட லதா மங்கேஷ்கர் இதே உயிருக்கு போராடிக்க கொண்டிருக்கிறார்.