ADMK Vs DMK: இதெல்லாம் தேவையா..? அதிமுக ஆதரவில்லை.. நேரத்தை வீணடிக்காதீர்கள்..ஓபிஎஸ் காட்டம்

By Thanalakshmi V  |  First Published Feb 5, 2022, 4:47 PM IST

சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுப்போன்று நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து நீட் தேர்வு ரத்து போன்ற மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
 


என் தலைமையில் இயங்கும் அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பில் இணைந்து செயல்படுங்கள்' என, பா.ஜ., தவிர, அ.தி.மு.க., - பா.ம.க., - காங்., உள்ளிட்ட, 38 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின், நேற்று முந்தினம் கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார்.

நாடு முழுதும் சமூக நீதிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களை, பாதுகாக்க வேண்டும். அதற்காக, அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு துவக்கப்படும் என்ற அறிவிப்பை, குடியரசு தினத்தன்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.அதன்படி, சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்து செயல்படும்படி, பா.ஜ., அல்லாத 38 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

Latest Videos

சோனியா - காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம், பரூக் அப்துல்லா - ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, சரத்பவார் - தேசியவாத காங்கிரஸ், டி.ராஜா - இந்திய கம்யூனிஸ்ட், சீதாராம் யெச்சூரி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேவகவுடா - மதச்சார்பற்ற ஜனதா தளம், சந்திரபாபு நாயுடு - தெலுங்கு தேசம், நவீன் பட்நாயக் - பிஜு ஜனதா தளம், மம்தா பானர்ஜி - திரிணமுல் காங்கிரஸ், மெகபூபா முப்தி - ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, உத்தவ் தாக்கரே - சிவ சேனா, அரவிந்த் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி, சந்திரசேகர ராவ் - தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி, ஜெகன்மோகன் ரெட்டி - ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், ஹேமந்த் சோரன் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ரங்கசாமி - என்.ஆர்.காங்கிரஸ், அகிலேஷ் யாதவ் - சமாஜ்வாதி, மாயாவதி - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சமூகநீதி கூட்டமைப்பு அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், ஓர் அமைப்பை தொடங்குவதற்கு முன் ஒத்தக்கருத்து கொண்டவர்களை அழைத்துப்பேசி விவாதிக்கவேண்டும் எனவும், விவாதிக்காமல் அமைப்பை ஏற்படுத்திவிட்டு பிரதிநிதியை நியமிக்கக்கூறுவது கூட்டாட்சிக்கு முரணாக உள்ளது எனவும் கூறியுள்ள அவர், நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து நீட் தேர்வு ரத்து போன்ற மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நலத்திற்காக, தமிழக மக்களின் நலத்திற்காக குரல் கொடுக்க அஇஅதிமுக என்றும் தயங்காது.

திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு என்ற அமைப்பு தங்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக அனைவரும் கருதுகிறார்கள். pic.twitter.com/bbwviqIsSK

— O Panneerselvam (@OfficeOfOPS)

முன்னதாக நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆதரவு அளிக்குமாறு 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு இதுவரை எந்த மாநில முதல்வரும் பதில் கடிதம் அனுப்பவில்லை எனவும் தன்னுடைய 9 மாத கால ஆட்சியின் தோல்வியை மறைக்க, சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் காகிதப் பூ நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக ஸ்டாலின் எதையாவது செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

click me!