
நீட் விவகாரத்தில் ஆளுநரை பொருத்தவரையில் இந்திய அரசியலமைப்பின்படி ஆற்ற வேண்டிய பணியை தமிழக ஆளுநர் சரியாக செய்து கொண்டிருக்கிறார் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நீட் மசோதாவை அவர் ரத்து செய்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது மட்டும் அல்லாமல், ஆளுநர் சட்டப்படிதான் செயல்படுகிறார் என ஓபிஎஸ் கூறியிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 143 நாட்கள் காலம் தாழ்த்திய நிலையில் அந்த மசோதாவை கடந்த 1 ஆம் தேதி மீண்டும் சபாநாயகருக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர். இது தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களின் மருத்துவகனவை சிதைக்கிறது, இந்த தேர்வால் மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் வசதிபடைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவே நீட் அமைந்திருக்கிறது, மொத்த த்தில் இது சமூக நீதிக்கும் எதிராக உள்ளது என்ற குற்றஞ்சாட்டை தமிழக அரசு முன் வைத்து நீட் விலக்கு கோரியுள்ள நிலையில், இந்த நீட் தேர்வு மாணவர்கள் பொருளாதாரரீதியில் சுரண்டப்படுவதை தடுக்கிறது என ஆளுநர் காரணம் காட்டி தமிழக அரசின் மசோதாவை ரத்து செய்திருப்பது நகை முரணாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் பாஜகவைப் போலவே அதிமுகவும் புறக்கணித்துள்ளது.
எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சியை பயன்படுத்தி நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது பெரிய அளவில் அதற்கு அதிமுக எதிர்ப்பு காட்டவில்லை, ஆனால் இத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி தலைமையிலான அரசு குடியரசு தலைவருக்கு அனுப்பியது ஆனால் அந்த மசோதா 27 மாதங்கள் கழித்து நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்ற தகவலை கூட அதிமுக பகிரங்கமான வெளியில் கூறாமல் மௌனம் காத்தது. அது அதிமுக மீது அப்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகுதான் நீட் விலக்கு கோரிக்கையில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு, அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதாவை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதே நடைமுறைக்கு கொண்டு வந்தது.
அதாவது 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததே தவிர, நீட் விலக்கிற்கு தீர்வுகாணவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தவரை பாஜகவை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாகவே இருந்தது. அதனால் மத்திய பாஜகவுக்கு அதிமுக தலையாட்டி பொம்மையான செயல்பட்டது என்ற விமர்சனம் குற்றச்சாட்டு அதிமுக மீது இன்றளவும் உள்ளது. இந்நிலையில்தான் தற்போதைய ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் அதிமுக சிறு கண்டனம் கூட தெரிவிக்காததுடன், அனைத்து கட்சிக் கூட்டத்தையும் புறக்கணித்திருக்கிறது. அதிமுகவின் இந்த செயலை பலரும் பலவகையில் கண்டித்து வருகின்றனர். குறிப்பான தமிழக மூத்த அமைச்சர் துரை முருகன் நீட் விவகாரத்தில் அதிமுக -பாஜக நாடகம் தொடர்கிறது என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீட் தேர்வை எழுத வைத்து - அதற்கான நீட் மசோதாவை கிடப்பில் போட்டு அப்போது “அ.தி.மு.க. - பா.ஜ.க” போட்ட நாடகத்தை இன்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அ.தி.மு.க.வும்- ஒன்றிய அரசாக உள்ள பா.ஜ.க.வும் கூச்சமின்றித் தொடருகின்றன. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலிகள்! நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. நாடகத்திற்கு - தமிழ்நாட்டு மக்களும், மாணவர் சமுதாயமும் இணைந்து தக்க பதிலடி கொடுக்கும். இது மாணவர்கள் கிளர்ந்தெழுந்து - அறவழிப் போராட்டம் நடத்தி - பல உயிர்த்தியாகங்களைச் செய்து தமிழ்மொழியை காப்பாற்றிய மண் என்பதை திரு. ஓ. பன்னீர்செல்வத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன் என எச்சரித்துள்ளார். இதே போல் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு, அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுகவை மக்களும் புறக்கணிப்பார்கள் என எச்சரித்துள்ளார். இந்நிலையில்தான் மதுரை விமான நிலையித்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளஒ.பன்னீர் செல்வம்.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வரை அதிமுக உறுதியாக எதிர்க்கும். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது என்றால் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சிதான் காரணம் என விமர்சித்துள்ளார். மேலும் நீட் விவகாரத்தை பொறுத்தவரையில் இந்திய அரசியலமைப்பின்படி, ஓர் ஆளுநராக ஆற்ற வேண்டிய பணியைநான் தமிழக ஆளுநர் சரியாக செய்து கொண்டிருக்கிறார் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் அதாவது நீட் தேர்வை எதிர்க்கிறோம் என ஒரு புறம் தெரிவிக்கும் ஓபிஎஸ், மற்றொரு புறம் ஆளுநர் சட்டப்படி தனி பணியை செய்கிறார் என கூறுவது நகைமுரணாக உள்ளது.