
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது போல எதிர்காலத்தில் அக்காட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலையில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில் மா.சுப்பிரமணியன் இவ்வாறு கூறியுள்ளார்.
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 143 நாட்கள் காலம் தாழ்த்திய நிலையில் அந்த மசோதாவை கடந்த 1 ஆம் தேதி மீண்டும் சபாநாயகருக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர். இது தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தற்போது நீட் தேர்வு என்பது தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் பொருளாதாரரீதியில் சுரண்டப்படுவதை தடுக்கிறது. நீட் விலக்கு கோரும் இந்த மசோதா கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ளது என ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் நீட் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கிறது, இந்த தேர்வால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் தற்கொலை தொடர்கிறது, நீட் தேர்வு ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் வசதிபடைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவே அமைந்திருக்கிறது, மொத்த த்தில் இந்த தேர்வு சமூக நீதிக்கு எதிராக உள்ளது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் மாணவர்கள் பொருளாதாரரீதியில் சுரண்டப்படுவதை நீட் தடுக்கிறது என ஆளுநர் காரணம் காட்டி இதை ரத்து செய்திருப்பது நகை முரணாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான்
நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, காங்கிரஸ் என 13 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலும் பாஜக இக் கூட்டத்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. அதேபோல் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அதிமுகவும் அதை புறக்கணித்துள்ளது.
இதனால் வெறும் 11 கட்சிகள் மட்டுமே அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டன. கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததுடன், தமிழக கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்ப அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழக பாஜக தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்து வரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் அதிமுகவும் இணைந்துள்ளது. அதிமுகவின் இந்த முடிவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பது போல எதிர்காலத்தில் மக்கள் அதிமுகவை புறக்கணிப்பார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது சட்டமன்றத்தில் மீண்டும் மசோதா நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் விவகாரம் குறித்து மக்களுக்கு புரிந்த அளவுக்கு கூட அண்ணாமலைக்கும், ஆளுநருக்கும் புரியாமல் போனது வேடிக்கையாக உள்ளது. கல்வியை மாநிலப் பட்டியலில் நிரந்தர படுத்துவது குறித்து தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று திமுக எம்.பி வில்சன் தாக்கல் செய்துள்ளார். இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணித்து இருக்கிறது, அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பது போல எதிர்காலத்தில் மக்கள் அதிமுகவை புறக்கணிப்பார்கள். நீட் தேர்வு விலக்கு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணம், இதை ஆதரிக்க அதிமுக முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.