அவங்க உள்ள வந்தாங்கன்னா உங்களுக்கு ஒண்ணுதான் !! வரலைன்னா உறுதியா ரெண்டு தர்றோம்… வாசனுக்கு உறுதி கொடுத்த எடப்பாடி !!

By Selvanayagam PFirst Published Feb 25, 2019, 10:55 PM IST
Highlights

அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வந்தால் உங்களுக்கு ஒரு தொகுதிதான் தர முடியும் என்றும் அவர்கள் வரவில்லை என்றால் இரண்டு தொகுதிகள் ஒதுக்கித் தருவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  தேமுதிகவுடன் நடைபெற்று வரும் பேச்சு வார்த்தையில் தொடர் இழுபறி நிலவி வருகிறது. தேமுதிக தங்களுக்கு பாமகவிற்கு இணையான தொகுதிகள் வழங்க வேண்டும் என முரண்டு பிடித்து வருகிறது. ஆனால் அதிமுக அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை

இதனிடையே  அதிமுக கூட்டணியில் தமாகா இடம்பெற முடிவெடுத்துள்ள நிலையில், தேமுதிக வந்தால் ஒரு சீட் எனவும், வராவிட்டால் இரண்டு சீட் தருவதாக அதிமுக தரப்பு உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியில் தமாகா இடம்பெறும் என ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்., இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அவரே நேரடியாக களம் இறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கான முயற்சியை தற்போது தமாகா தொடங்கியுள்ளது. அதிமுக தரப்பிலும் ஜி.கே.வாசனுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

அதில் ஒரு தொகுதியாக மயிலாடுதுறையை கேட்டுள்ளார். அந்த தொகுதியில் ஜி.கே.வாசனே போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டது. மற்றொரு தொகுதிக்கு நெல்லை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய 4 தொகுதிகளில் ஏதாவது ஒன்றை ஒதுக்கி தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால் அதிமுக தரப்பில் ஒரு சீட் மட்டுமே வழங்கப்படும் என்றும், அதுவும் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தாக கூறப்படுகிறது.இது தமாகா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் அதிக தொகுதிகளை கேட்பதால் அதிமுக தரப்பு முடிவெடுக்க முடியாமல் உள்ளது. 

இதனால் தேமுதிக திமுக பக்கம் செல்லும் என்ற நிலை உள்ளது. எனவே, 'அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் தமாகாவுக்கு ஒரு சீட் மட்டுமே வழங்கப்படும் என்றும், தேமுதிக வராவிட்டால் இரண்டு சீட் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று அதிமுக தரப்பு ஜி.கே.வாசனிடம் உறுதி அளித்துள்ளனர். 

click me!