கிருஷ்ணசாமியைக் கதறவிடும் அதிமுக – பாஜக கூட்டணி !! தனித்து போட்டியிட முடிவு !!

By Selvanayagam PFirst Published Feb 25, 2019, 8:51 PM IST
Highlights

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் இருப்பதாக கூறப்பட்ட புதிய தமிழகம் கட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து இதுவரை பேசாததால் ஆத்திரமடைந்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதே போல் புதிய தமிழகம், புதிய நீதி கட்சி மற்றும் ஐஜேகே கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்கப்படும் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் இந்த மூன்று கட்சிகளையும் அதிமுக – பாஜக தலைவர்கள் இது வரை கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின்  தலைவர் கிருஷ்ணசாமி தமிழகத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 12 சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தல்களிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் பட்டியல் இன வெளியேற்றம் குறித்து தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் இல்லையென்றால் தனித்து போட்டியிடுவது பற்றி யோசிப்போம் என்று கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார்.

மதுரை பொதுக்கூட்டத்தில் தேவேந்திர குல மக்களின் கோரிக்கையை பரீசிலனையில் இருப்பதாகவும்  அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  மோடி தெரிவித்தார். 

இந்நிலையில் அதிமுக - பாஜக கட்சிகள் புதிய தமிழகம் கட்சிக்கு தொகுதி எதுவும் ஒதுக்கவில்லை. மேலும் அவரை  பேச்சு வார்த்தைக்குக் கூட அழைக்காமல் தண்ணி காட்டி வருகின்றனர். 

இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி. 12 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களிலும்,  20 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.

click me!