கர்நாடகாவில் நாளை முதல் முழு ஊரடங்கு..அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் எடியூரப்பா அதிரடி அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Apr 26, 2021, 4:03 PM IST
Highlights

மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து அமைச்சர்கள், மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் ஊரடங்கு முடிவு எடுக்கப்பட்டதாக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். நாளை இரவு முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. 

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி உள்ளது. மக்கள் கொத்துக்கொத்தாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளன. கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 13.39 இலட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 143 பேர் உயிரிழந்தனர். இதுவரை அந்த மாநிலத்தில்  14 ஆயிரத்து  426 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வைரஸ் கட்டுப்படுத்த மாநில அரசு எத்தனை நடவடிக்கைகளை எடுத்தும் வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. மாநில முதலமைச்சர் எடியூரப்பா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதுவரை 2 முறை கொரோனா தொற்றுக்கு ஆளான அவர் அதில் இருந்து மீண்டுள்ளார். கொரோனா தீவிரத்தை உணர்ந்த அம் மாநில அரசு, மக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், போன்றவற்றுடன் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்தது.

ஆனாலும் பொதுமக்களின் முழு ஆதரவு இல்லை எனவும் அரசு அடிக்கடி குறைபட்டு வந்தது. இந்நிலையில் மாநிலத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டது. ஆனால்  வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த  கூடுதல் கட்டுப்பாடுகள் அவசியம் என உணர்ந்த மாநில அரசு அது தொடர்பாக முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் இன்று மந்திரி சபையைக் கூட்டி விவாதித்தது. கூட்டத்தின் முடிவில், மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து அமைச்சர்கள், மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் ஊரடங்கு முடிவு எடுக்கப்பட்டதாக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவின் அடுத்த 14 நாட்களுக்குள் முழு வருடங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். நாளை இரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது எனவும், அத்தியாவசிய சேவைகள் காலை 6 மணி முதல் 10 மணிவரை அனுமதிக்கப்படுகின்றன, காலை 10 மணிக்குப் பிறகு கடைகள் மூடப்படும், கட்டுமான பணிகள், விவசாய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அவர், பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.  

 

click me!