‘ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனில் 1,015 மெட்ரிக் டன் மருத்துவத்துக்கு பயன்படாது’... ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 26, 2021, 03:10 PM IST
‘ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனில்  1,015 மெட்ரிக் டன் மருத்துவத்துக்கு பயன்படாது’... ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்...!

சுருக்கம்

ஸ்டெர்லைட் ஆலையின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன் 1050 டன்னில் வெறும் 35 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டிற்கு தகுதியானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன் 1050 டன்னில் வெறும் 35 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டிற்கு தகுதியானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுவது, ரெம்டெசிவர் மருந்து, தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்தவாரம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில்,   இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர், படுக்கை வசதி, ரெம்டெசீவர் உள்ளிட்ட மருந்து கையிருப்பு ஆகியவற்றின் விரிவான அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும் ஸ்டெர்லைட் ஆலை  மொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன் 1050 டன் என உச்ச நீதிமன்றத்தில் கூறியது. ஆனால், அதில் வெறும் 35 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டிற்கு தகுதியானது எனவும்,  வாயு வடிவில் உள்ள ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனாக மாற்றும் ஆலையை நிறுவ 9 மாதங்கள் ஆகும் எனவும் தெரிவித்தார்.

ரெம்டெசிவிர் மருந்துகளை பொறுத்தவரை, 59000 குப்பிகளையே  மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு குப்பி  1460 க்கு தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், இந்த மருந்துகள் கள்ள சந்தையில் வைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், இதுசம்பந்தமாக புகார் அளிக்க தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், நேரடியாக பொதுமக்களுக்கு இந்த மருந்தை வழங்க சென்னை கீழ்ப்பாக்கத்தில் விற்பனை மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுவதால் தான், இதுவரை 52 லட்சம் பேர் மட்டும் தடுப்பூசி போட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்தும், ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்துவது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். மேலும், திமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான வில்சன், சென்னையில் அமைக்கப்படுவது போல பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவர் மருந்து விற்பனையகங்களை துவங்க வேண்டும் எனவும், சென்னைக்கு அருகில் 600 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு, மூடப்பட்டுள்ள தடுப்பூசி ஆலையை திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.மூத்த வழக்கறிஞர் ராமன், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பயண கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்றார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் பிரசாத், அரசு மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை உள்ளதாகவும், மருத்துவமனைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, தலைமை நீதிபதி, மே 2 வாக்கு எண்ணிக்கை என்பது தொற்று பரவலுக்கான மற்றொரு நாளாக இருக்க கூடாது என்பதாலும், மக்களின் சுகாதாரத்தில் சமரசம் செய்யக் கூடாது என்பதால், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் எண்ணிக்கை நிறுத்தப்படும் என எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


அரசியல் தலையீடு இல்லாமல் கள்ள சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை பதுக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சிகிச்சை விஷயத்தில் வி ஐ பி கலாச்சாரம் கூடாது எனவும், அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ரெம்டெசிவர் மருந்து தொற்று பாதித்த அனைவருக்கும் தேவையில்லை என விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்திய நீதிபதிகள், அரசின் ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்ததாக பாராட்டு தெரிவித்தனர். வழக்கில் வாதம் நிறைவடையாததால் பிற்பகல் விசாரணை தொடர்கிறது.

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!