திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமைகளாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டி உள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அதிமுக நகரம் சார்பில் பட்டியிலன பெண் மீது திமுக சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்தினர் நடத்திய வன்கொடுமையை கண்டித்தும், கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ் பி வேலுமணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், திமுகவுடன் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் கோபாலபுரத்து அடிமையாக உள்ளன. வேங்கை வயல் சம்பவம், பட்டியலின பெண்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் கொடூர கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதை கண்டிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இதில் அவைத் தலைவர் வால்பாறை சட்டமன்ற பொறுப்பாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர்கள் கிணத்துக்கடவு தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜி. கே, சுந்தரம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.