முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைதா? நள்ளிரவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்...!

By manimegalai aFirst Published Mar 1, 2022, 12:57 AM IST
Highlights

காவல்துறையினரையும், அரசு அதிகாரிகளையும் தொடர்ந்து விமர்சித்து வரும் சிவி சண்முகம் கைது செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டு முன் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

திமுக ஆட்சி பதவியேற்றதிலிருந்து  முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில்  சோதனையும் கைது நடவடிக்கையும்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது..  முன்னாள் வணிக வரித் துறை அமைச்சராக இருந்த கே சி வீரமணி வீட்டில் திமுக அரசு பதவியேற்றதும் தனது முதல் சோதனையை  தொடங்கியது. இதனையடுத்து முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி, வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் அடுத்தடுத்து சோதனைகள் நடைபெற்றன.  இந்த சோதனைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள்  கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

 முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடுத்துடுத்து சோதனை நடைபெற்று வரும் சமயத்தில், வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக கூறி  முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து கைது  நடவடிக்கையும்  எடுக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்தவர் விசாரணைக்காக அவ்வப்போது போலீசார் முன் ஆஜராகி வருகிறார்.இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி தேர்தலில் கள்ள வாக்கு போடவந்ததாக கூறி திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் ஜாமின் பெற்ற நிலையில் புதிய மோசடி வழக்கு பதிவு செய்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் வெளியே வர முடியாமல் ஜெயக்குமார் சிக்கி தவித்து வருகிறார்.


ஆட்சி மாற்றம் நடைபெற்ற சில நாட்களிலேயே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், காவல்துறையினரை மிரட்டும் வகையில் விமர்சித்து வந்தார். நேற்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட சிவி சண்முகம், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் திமுகவினரை பழிவாங்குவோம் என பேசினார். இந்தநிலையில் வீரத் தமிழர் பேரவையின் தலைவர் தங்க. பாஸ்கரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில்  பொதுவெளியில் தகாத வார்த்தையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகள், காவல்துறையினரை  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாக தங்க பாஸ்கரன் தெரிவித்தார். முன்னதாக சிவி சண்முகம் மீது விழுப்புரம் காவல்துறையினரும்  வழக்குப்பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து திண்டிவனத்தில் உள்ள சிவி சண்முகத்தின் வீட்டு முன் சிவி சண்முகத்தின் அண்ணன் சிவி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
  
அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் வந்த சிவி சண்முகத்தை பார்த்த தொண்டர்கள் திமுகவினருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது தொண்டர்களிடம் பேசிய சிவி சண்முகம், திமுக அரசு தன்னை கைது செய்யாமல் விடமாட்டார்கள் என்றும், எனவே எதற்கும் தயாராக உள்ளதாக  கூறினார். மேலும் கூடியிருந்த பெண்களை பார்த்து இரவு நேரத்தில் ஏன் வந்துள்ளீர்கள் என கேட்டு வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தினார். இருந்து போதும் அதிமுக தொண்டர்கள் கலைந்து செல்ல தயக்கம் காட்டினர். சிவி சண்முகம் கைது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்ததற்கு  கைது செய்யும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லையென கூறியுள்ளனர். 

click me!