ADMK : அதிமுகவில் ஒற்றைத் தலைமை.. பரபரப்பை கிளப்பிய மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

By Asianet TamilFirst Published Feb 28, 2022, 9:55 PM IST
Highlights

"தற்போதுள்ள இரட்டை தலைமையால் கட்சிக்குள்ளும் தொண்டர்களுக்கும் எந்த மனக் குழப்பமும் இல்லை. கட்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
 

கட்சி தலைமை முடிவெடுத்தால் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் இயங்கவும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விடுவிக்கக் கோரியும் அவர் மீதான வழக்கை கைவிடக் கோரியும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நபரை பிடித்துக் கொடுத்ததற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்கை பதிவு செய்துள்ளார்கள். உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற அந்த நபரை போலீசார் தடுத்தும்கூட, போலீஸ் மீதே கல்லெறிந்து விரட்டி அடித்துள்ளார். 

அப்படிப்பட்ட நபரைத்தான் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியின் பேரில் தொண்டர்கள் உதவியுடன்  பிடித்து போலீசில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒப்படைத்தார். ஆனால், அவர் மீதே பொய் வழக்குப் பதிவு செய்து இன்று சிறையில் அடைத்திருக்கிறார்கள். இப்போதும்கூட, ஜெயக்குமார் மீது கொடுக்கப்பட்ட பழைய புகார்களை தூசி தட்டி எடுத்து மீண்டும் மீண்டும் அவரை வெவ்வேறு வழக்குகளில் கைது செய்துள்ளது ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கு. முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பாதுகாக்கும் முயற்சியை அவர் முன்னெடுக்கிறாரா என்று எண்ணத் தோன்றுகிறது.

எனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை எல்லாம் ரத்து செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததுமே அதிமுகவை முடக்கும் நினைப்பில் கேலிக்கூத்தான விஷயங்களை செய்து வருகிறார்கள். இந்த நடவடிக்கைகளின் மூலம் அதிமுகவை முடக்கிவிட முடியாது. தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் கழகப் பணிகளை செய்து வருகிறார்கள். கட்சி தலைமை முடிவெடுத்தால் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் இயங்குவதையும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தற்போதுள்ள இரட்டை தலைமையால் கட்சிக்குள்ளும் தொண்டர்களுக்கும் எந்த மனக் குழப்பமும் இல்லை. கட்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
 

click me!