விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரசில் முக்கிய பதவி.. KS.அழகிரி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jul 27, 2021, 8:08 PM IST
Highlights

தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

தமிழக இளைஞரான சசிகாந்த் செந்தில் 2009-ல் கர்நாடகாவில் ஐஏஎஸ் பணியை தொடங்கினார். துணை ஆட்சியர், ஆட்சியராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். 2019 செப்டம்பர் 6-ம் தேதி ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார். அதன்பிறகு பல்வேறு மக்கள் நல போராட்டங்களில் பங்கேற்றார். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து, அவருக்கு மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள், பயிற்சி முகாம் நடத்துவது குறித்த பணிகள் சிறப்பாக அமைந்திட, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துறைகளை சார்ந்தவர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகளை ஒருங்கிணைக்கும் மகத்தான பொறுப்பினை அளித்த தலைமைக்கு எனது நன்றி என்றும் கடைக்கோடி தொண்டர்களுடன் மக்கள் நலனை முன்னிறுத்தி எங்களது பயணம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.

click me!