அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அருண் சுப்பிரமணியன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார்.
25 தொகுதிகளை குறிவைத்த பாஜக
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பாஜகவின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக 25 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்ற பாஜக திட்டம் வகுத்துள்ளது. இதற்காக மாவட்டம் தோறும் பொதுக்கூட்டம், ஆர்பாட்டம் என களம் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி. கேபி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் கு.க.செல்வம், டாக்டர் சரவணன் என ஒன்றன் பின் ஒன்றாக இணைந்தனர். இதே போல அதிமுக மூத்த நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், ச்சிகலா பஷ்பா உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ
இந்தநிலையில் தேமுதிக கட்சியின் திருத்தணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அருண் சுப்பிரமணியன் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அருண் சுப்பிரமணியன் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்தவர் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தார். இதனையடுத்து தேமுதிக மற்றும் பாமாகவை சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தனர். இந்தநிலையில் அதிமுகவில் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர் கடந்த சில வருடங்களாக அதிமுக நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்தநிலையில், இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அருண் சுப்பிரமணியன் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்