
வட இந்தியாவில் மட்டுமே வெற்றிகளைப் பெற்ற பாஜகவுக்கு, தென் இந்தியாவில் பாதை ஏற்படுத்திக் கொடுத்தது கர்நாடகா. அதற்குக் காரணமாக இருந்த தலைவர்களில் முக்கியமானர் எடியுரப்பா. கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தபோது 4 முறை பதவியேற்றவர் அவர். கடைசியாக கடந்த 2019 முதல் 2021 வரை முதல்வராக இருந்தார். 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி வழங்குவதில் கட்டுப்பாடுகளை பாஜக பின்பற்றி வருவதால், அந்த அடிப்படையில் முதல்வர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு விலகினார். இந்நிலையில் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் எடியூரப்பா, தன்னுடைய இளைய மகன் விஜயேந்திராவை முன்னிலைபடுத்தத் தொடங்கினார்.
இதையும் படிங்க: மேற்கு வங்க அமைச்சரின் உதவியாளர் வீட்டில் சோதனை... ரூ.20 கோடி ரொக்கம், செல்போன்கள் பறிமுதல்!!
ஏற்கெனவே அவருடைய மூத்த மகன் ராகவேந்திரா சிவமொக்கா தொகுதி எம்.பி.யாக உள்ளார். தற்போது இரண்டாவது மகனையும் அவர் முன்னிலைப்படுத்துவதில் பாஜக தயக்கம் காட்டி வந்தது. வாரிசு அரசியலுக்கு எதிராக பிரதமர் மோடியும் பிற தலைவர்களும் பேசி வரும் சூழலில், இந்தத் தயக்கம் பாஜகவுக்குள் இருந்தது. என்றாலும், எடியூரப்பாவின் அழுத்தத்தால் கர்நாடக பாஜக துணைத்தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அடுத்த கட்டமாக அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பா 6 முறை வென்ற சிகாரிப்புரா தொகுதியில் தன்னுடைய மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேசிய அளவில் வளரும் ஆம் ஆத்மி.. சகித்துக் கொள்ளாத பாஜக.. அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லும் காரணம்!
சிகாரிப்புரா தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடியூரப்பா பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், “அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவார். மக்கள் எனக்கு ஆதரவு கொடுத்தது போல அவருக்கும் ஆதரவு அளித்து அரவணைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எடியூரப்பாவிடம் கேள்வி எழுப்பியபோது, “சிகாரிப்புரா தொகுதியில் எனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார். கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைய மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்” என்று தெரிவித்தார். அரசியலிலிருந்து முழுமையாக விலகும் எண்ணத்தில் எடியூரப்பா இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், மூத்த மகனைத் தொடர்ந்து இளைய மகனுக்கும் கட்சி மேலிடம் சீட்டு வழங்குமா என்ற கேள்வியும் கர்நாடகா பாஜகவில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அறுவை சிகிச்சைக்கு போன உத்தவ் தாக்கரே.. பிளவுக்கு திட்டம் போட்ட ஏக்நாத் ஷிண்டே.. கதறும் ஆதித்ய தாக்கரே!