இளையராஜாவுக்கு எம்.பி பதவி கொடுத்தாலும் பாஜகவுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவுக்கு எம்.பி பதவி கொடுத்தாலும் பாஜகவுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். என் தம்பி யுவன் சங்கரை பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜா கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சிகள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணம் அவர் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு வெளியிட்ட கருத்துதான் காராணம். அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு புத்தகம் ஒன்றுக்கு அவர் எழுதிய முகவுரையில் சட்டமேதை அம்பேத்கர் உடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா அம்பேத்கரை இழிவுபடுத்திவிட்டார் என்றும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அவர் இப்படிப் பேசி வருகிறார் என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இளையராஜாவுக்கு மத்திய பாஜக அரசு நியமன எம்பி பதவி வழங்கி கோரவித்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வரும் நிலையில், பலரும் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியதற்கு சன்மானம்தான் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் சிலர் விமர்சித்தநு வருகின்றனர். அதேபோல் திமுகவின் கூட்டணி கட்சிகள் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் இளையராஜா இந்த பதவிக்கு தகுதியானவர் தான் ஆனால் பாஜக அதை எந்த நோக்கத்திற்காக அவருக்கு கொடுக்கிறது என்பது தான் முக்கியம், இளையராஜாவை எம்.பி பதவி கொடுத்து பாஜக அடையாள அரசியல் செய்கிறது, அதன் உள்நோக்கம் தவறானது என்று விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இளையராஜா அவர்கள் சிறந்த கலை அடையாளம், இசை அடையாளம், தமிழகத்தின் அடையாளம், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது பன்பாடு, நம்மில் ஒருவராக இருக்கிறவர் எம்.பி ஆகிறார் என்பதில் மகிழ்ச்சி, அவர் பாரதிய ஜனதா கட்சியில் கூட சேர்ந்து கொள்ளட்டும், அது குறித்து நமக்கு கவலை இல்லை, ஆனால் அவருக்கு தகுதி பார்த்து இந்த பதவி கொடுத்து இருந்தால் அது நமக்கு மகிழ்ச்சி, பெருமை, ஆனால் தலித் என்பதனால் கொடுத்தோம் என்று சொல்கிறார்கள் இது எப்படி பார்ப்பது. இது எப்படி ஏற்றுக்கொள்வது? அதுதான் அவரது தகுதியா?
இவ்வளவு காலம் கழித்து இவ்வளவு பெரிய சாதனையாளருக்கை தலித் என்பதனால் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள் அவர் ஒரு ஈடு இணையற்ற இசைஞானி என்பதனால் கொடுக்கிறோம் என்று சொல்லுங்கள், தலித் என்பதனால் தருகிறோம் என்று சொல்வது எப்படி எடுத்துக் கொள்வது என்றார். அப்போது இது வாக்கு அரசியல் என்று விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், முதலில் பாஜகவுக்கு ஓட்டு போட சொன்னால் எங்கள் ஐயா வீட்டில் என் தம்பி யுவன் சங்கர் ராஜாவே பாஜகவுக்கு ஓட்டு போடுவானா முதல்ல? என்று கேள்வி எழுப்பிய சீமான், எனவே இந்த வாக்கரசியல் எல்லாம் எட்படாது என்றார். நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ்சின் கருத்து உருவாக்கம் செய்யவேண்டும் என்பது ஆரியக் கோட்பாடு, அதற்குள் பழங்குடியினரை கொண்டுவருகிறோம், தலித்துகளை கொண்டுவருகிறோம் என்று சொல்லுகிறார்கள்.
இஸ்லாமியர்களை குடியரசுத் தலைவர் ஆக்கினார்கள் ஏன் அவர்களை பிரதமர் ஆக்கவில்லை, ராம்நாத் கோவிந்த்தை ஏன் பிரதமராக்கவில்லை, திரௌபதி முர்முவை ஏன் பிரதமர் வேட்பாளராக ஆக்கவில்லை. குடியரசுத் தலைவர் பதவி ஒன்றிற்கும் உதவாத என்பதினால்தான் அந்த பதவியை எங்கள் ஐயா அப்துல் கலாமுக்கு கொடுக்கிறீர்கள். ராம்நாத் கோவிந்த்துக்கு கொடுக்கிறீர்கள், திரௌபதி முர்முவுக்கு கொடுக்கிறீர்கள். இதில் என்ன மாறுதல் வந்துவிடப்போகிறது.? இதில் ஒன்றும் வராது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.