ஈரோடு இடைத்தேர்தல்.! இன்றோடு நிறைவு பெறும் வேட்புமனு தாக்கல்.! கடைசி நேரத்தில் களத்தில் இறங்கும் அதிமுக

By Ajmal KhanFirst Published Feb 7, 2023, 9:13 AM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையோடு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு வருகிற 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக எடப்பாடி அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ளார், இதனையடுத்து உச்சநீதிமன்ற்த்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக இன்று வேட்புமனு தாக்கல்

இதனையடுத்து கடைசிநாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதுவரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சேர்ந்த வேட்பாளர்கள் உள்ளிட்ட  மொத்தம் 59 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடையவுள்ளது.  வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (8-ம் தேதி) நடக்கவுள்ளது. வரும் 10-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 

இதையும் படியுங்கள்

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு 5ல்1 பங்கிற்கும் குறைவாக இழப்பீடு வழங்குவதா.? அன்புமணி ஆவேசம்

click me!