திருவிழா, அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

By Asianet TamilFirst Published Sep 9, 2021, 10:09 PM IST
Highlights

கொரோனா மூன்றாம் அலையைத் தடுக்கும் வகையில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை திருவிழாக்கள், அரசியல், சமூக, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடையை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புக்குழு அறிக்கை அளித்துள்ளது. அதில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அன்றாடம் சுமார் 1600 புதிய நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் தினசரி எண்ணிக்கை சற்று உயர்ந்தும் காணப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் ஏற்படாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்துடனான பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்துவரும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு தடைகள் தொடருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் நோய்த் தொற்று தீவிரமாக பரப்பக்கூடிய நிகழ்வுகளாக மாறக்கூடும். எனவே கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுகிறது.
* தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மட்டுமே பங்கேற்க அனுமதி.  தலைவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அரசியல் கட்சிகளுக்கு ஆட்சித் தலைவர் அனுமதி அவசியம்.
* கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டும், நிபா வைரஸ் தாக்கம் கருதியும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கம் ஏற்படாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
* கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலையை தடுப்பதற்கு தடுப்பூசியின் பங்கு முக்கியம். தினமும் சுமார் 3 லட்சம் தடுப்பூசி என்ற அளவை தற்போது 5 லட்சம் என அதிகரித்துள்ளோம். தமிழகத்தில் 45 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 12 சதவீதம் பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
*  பொதுப்போக்குவரத்தை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். 
*  பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.  
*  கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
*  பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!